நான் இயற்கையின் இளவரசி : அனன்யா

|

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நான் இயற்கையின் இளவரசி : அனன்யா

5/6/2011 11:54:39 AM

இயற்கை தவழ்ந்து கொஞ்சி விளையாடும் கேரளாவில் பிறந்த ஒவ்வொருவரது ஞாபகங்களும் அந்த இயற்கையை போன்றே பசுமையாக இருக்கும் என்பார்கள். எனது நினைவுகளை மீட்டும்போது அது உண்மைதான் என்று தெரிகிறது. கொச்சியிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரும்பாவூர்தான் நான் பிறந்த ஊர். மலைகளின் நடுவில் இருக்கும் அழகான கிராமம். அப்பா பத்திர எழுத்தர், அம்மா ஸ்டாம் விற்பனையாளர். இருவருமே ஒரே துறையில் இருப்பதால் ஊரே அவர்களை அறியும், அவர்கள் பிள்ளை அனன்யா என்பதால் என்னையும் அறியும்.

எம்.ஐ.டி பப்ளிக் ஸ்கூலில் எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை படித்தேன். சின்ன வயதிலேயே ஆங்கிலம் பிடிக்கும் என்பதால் ஆங்கில டீச்சர் சாரதாவையும் பிடிக்கும். வளர்ந்ததும் அவரைப் போலவே இங்கிலீஷ் பேச வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறேன். 5ம் வகுப்பு படிக்கும்போது எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஆலமரக் காட்டுக்கு அழைத்துப் போனார்கள். ஆலமரங்கள் நிறைந்த பகுதி அது. கைதட்டி ஆலமரத்தில் உள்ள பறவைகளை விரட்டி அவைகள் பறப்பதை ரசிக்க வேண்டும். விழுதுகளில் ஊஞ்சலாட வேண்டும். இதுதான் டூரின் கான்செப்ட். ஆனால், பறவைகளை விரட்ட மனமில்லாமல் விழுதுகளில் மட்டும் விளையாடியதை இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. சிறுவயதிலேயே நான் தெளிவாக இருந்திருக்கிறேன்!

6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கவர்மெண்ட் கேர்ள்ஸ் ஹைஸ்கூலில் படித்தேன். அந்த நேரத்தில் அறிவியலின் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததால் டாக்டராக வேண்டும் என்று விரும்பினேன். அதனாலேயே சயின்ஸ் டீச்சர் இந்திராவை பிடித்திருந்தது. 'நீ டாக்டராகி இதே ஊர்ல எல்லாருக்கும் வைத்தியம் செய்றதை என் கண்ணால பார்க்கணும்' என்று அடிக்கடி சொல்வார். பாவம், அவரது ஆசை பொய்த்துவிட்டது. திரையில் மட்டுமே என்னைக் கண்டு களிக்கிறார். அவருக்காகவாவது ஒரு படத்தில் டாக்டராக நடிக்க வேண்டும்.

ஒருமுறை யானைகளை வளர்க்கும் குவாட நாட்டுக்கு டூர் சென்றோம். டாப்சிலிப்ஸ் மாதிரி காட்டு யானைகளை பராமரிக்கும் அந்த இடத்தைப் பார்த்ததும் யானைகள் மீது பெரிய மரியாதை வந்தது. யானைகளை வளர்க்கவும் ஆசைப்பட்டேன். அதன் பிறகு ஹையர் செகண்டரி ஸ்கூலில் சேர்ந்து பிளஸ் 2 முடித்தேன். விளையாட்டு பக்கம் கவனம் திரும்பியதும் அப்போதுதான். யாரும் விளையாடத் தயங்கும் ஒரு விளையாட்டை தேர்ந்தெடுக்க முடிவு செய்து, வில்வித்தையை கையில் எடுத்தேன். அதில் தீவிர பயிற்சி பெற்று இரண்டு முறை ஸ்டேட் சாம்பியனானேன். ஒரு முறை தேசிய அளவிலான போட்டியில் கலந்து
கொண்டேன்.

ஆலப்புழையில் உள்ள ஆர்ட்ஸ் காலேஜில் சேர்ந்தபோதுதான் நசீமா நசீர் அறிமுகமானாள். அதுவரை சொல்லிக் கொள்ளும்படி தோழிகள் இல்லாமல் இருந்த எனக்கு அவள் உயிர்த் தோழியானாள். ஆனால், சினிமா போல் எங்கள் நட்பு மோதலில்தான் ஆரம்பமானது. அவள் உள்ளூரை சேர்ந்தவள் என்பதால் 'பெரிய தாதா' மாதிரி நடந்து கொண்டாள். ஹீரோ மாதிரி அவளை எதிர்த்து நின்றேன். இந்த மோதலே எங்களுக்குள் நட்பாகி இன்று வரையும் தொடர்கிறது.

விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு செல்வேன். அவர்களுக்கு நான்தான் மகாராணி. செல்லம் அதிகம். அப்பாவும் அம்மாவும் வேலைக்கு செல்பவர்களாக இருந்ததால் கண்டிப்புடன் வளர்த்தார்கள். எனவே அவர்களுக்குத் தெரியாமல் நானும் தம்பியும் அடிக்கடி சண்டை போடுவோம். ஆனால், எப்படியோ எங்கள்  சண்டையை மோப்பம் பிடித்து விடுவார்கள். பிறகென்ன… இருவருக்கும் அடி விழும். சொன்னால் நம்பமாட்டீர்கள். கல்லூரி செல்லும்வரை பெற்றோரிடம் அடி வாங்கியிருக்கிறேன்!

எனக்கும் தண்ணீருக்கும் அப்படி ஒரு ஏழாம் பொருத்தம். தண்ணீரைக் கண்டாலே பயந்து நடுங்குவேன். வீட்டுக்கருகில் ஓடும் ஆற்றுக்கு அப்பா அழைத்துச் செல்வார். ஆனால், அவர் தோள்களில் அமர்ந்துதான் குளிப்பேன். மற்றபடி நானாக ஆற்றங்கரையில் கூட தனியாக கால் வைத்ததில்லை. இதனாலேயே இன்றுவரை நீச்சல் கற்றுக் கொள்ளவில்லை. தங்கத் தமிழ்நாட்டுக்கு நல்ல நடிகையை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நல்ல டீச்சர், நல்ல டாக்டர், நல்ல விளையாட்டு வீராங்கனை… ஆகிய மூன்றையும் கேரளா இழந்துவிட்டது! ஆனால், பெரும்பாவூருக்கு எப்போது நான் சென்றாலும் இந்த மூவரும் எங்கிருந்தோ ஓடிவந்து என்னுள் ஐக்கியமாகிவிடுவார்கள்.

 

Post a Comment