நடிகையிடம் சில்மிஷம்: ஜோசப் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு

|

Tags:



திருவனந்தபுரம்: விமானத்தில் சென்றபோது, நடிகை லட்சுமி கோபகுமாரை முன்னாள் கேரள அமைச்சர் ஜோசப் பாலியல் தொந்தரவு செய்ததாக தொடரப்பட்டு, இரு ஆண்டுகளுக்கு முன் முடிக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது கேரள நீதிமன்றம்.

கேரளாவில் கடந்த இடது முன்னணி அரசில் பொதுப்பணி துறை அமைச்சராக இருந்தவர் பி.ஜே.ஜோசப். இவர் கடந்த 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி சென்னையில் இருந்து கொச்சிக்கு ஒரு தனியார் விமானத்தில் வந்தார்.

விமானத்தில் அவரது முன் இருக்கையில் லட்சுமி கோபகுமார் என்ற நடிகை இருந்தார். திடீரென அமைச்சர் ஜோசப் தன்னிடம் சில்மிஷம் செய்ததாக நடிகை புகார் செய்தார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்து, அவர்கள் வழக்கும் பதிவு செய்தனர். இதையடுத்து ஜோசப் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

சில்மிஷ வழக்கை விசாரித்த சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் ஜோசப்பை இரு ஆண்டுகளுக்கு முன் விடுதலை செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க சென்னை போலீசுக்கு அதிகாரம் இல்லை என்றும், விமானம் கொச்சியில் தரையிறங்கியதால் கிரிமினல் சட்டப்படி செங்கமநாடு போலீஸ்தான் வழக்கு பதிவு செய்ய முடியும் என்றும் கூறி கேரள சட்ட உதவி அமைப்பின் தலைவர் ஸ்டீபன் என்பவர் கேரளாவில் ஆலுவா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கில் எதிர் மனுதாரர்களாக, முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், முன்னாள் உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன், முன்னாள் டிஜிபி ரமண் ஸ்ரீவாஸ்தவா, செங்கமநாடு எஸ்.ஐ, விமான பைலட் ஷாஜி மாதவன் ஆகியோர் குறிப்பிடப்பட்டனர்.

மனுவை விசாரித்த ஆலுவா நீதிமன்றம், சில்மிஷ வழக்கை செங்கமநாடு போலீசார்தான் விசாரிக்க வேண்டும் என்று கூறி, மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

 

Post a Comment