நடிகை வாணிஸ்ரீயின் ரூ 3 கோடி நிலம் ஆக்கிரமிப்பு!

|


சென்னை: போலி ஆவணங்கள் மூலம் ரூ 3 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த கல்லூரி பெண் முதல்வரும் அவர் தங்கையும் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, இவர்கள் ஆக்கிரமித்த நிலத்துக்குக்குப் பக்கத்திலிருந்த தன்னுடைய நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக நடிகை வாணிஸ்ரீ புகார் கொடுத்துள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ராமலிங்கம் (வயது 72). இவர் சென்னை சூளைமேட்டில் உள்ள தனது ரூ.3 கோடி மதிப்புள்ள நிலம், போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்டு, மோசடி செய்யப்பட்டு விட்டது என்றும், அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார்.

மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராதிகா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சுகன்யா வழக்குப் பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில் நில விற்பனை மோசடியில், சென்னை கெல்லீசில் வசிக்கும் பிரேமகுமாரி (69) என்ற பெண்ணும், அவரது தங்கை சந்திரநாதம்(53) என்பவரும், போலி ஆவணங்களில் கையெழுத்து போட்டு உடந்தையாக இருந்ததாகவும் தெரியவந்தது.

இதன்பேரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, நேற்று மாலை நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இவர்களில் பிரேமகுமாரி ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் ஆவார்.

போலீஸ் விசாரணையில் அவர் கூறும்போது, குறிப்பிட்ட நிலம் தனது அண்ணனின் நிலம் என்றும், அதன் உண்மையான ஆவணங்கள் தன்னிடம் இருந்ததாகவும், அந்த நிலத்தை வாங்கி விட்டதாக ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் கேட்டதற்கிணங்க அந்த ஆவணங்களை கொடுத்ததாகவும், அதற்கு ரூ.10 லட்சம் மட்டும் தந்தார்கள் என்றும், இதில் மோசடி வேலைகள் நடந்தது தனக்கு தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளதாக ரியல் எஸ்டேட் கும்பலைச் சேர்ந்த 4 பேரையும் தேடி வருகிறோம் என்றும், பிரேமகுமாரிக்கு குற்றத்தில் தொடர்பு இருக்கிறது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

நடிகை வாணிஸ்ரீ நிலமும் ஆக்கிரமிப்பு

இந்த குறிப்பிட்ட நிலம் அருகே உள்ள நிலம் தனக்கு சொந்தம் என்றும், ரூ.3 கோடி மதிப்புள்ள அந்த நிலமும் ரியல் எஸ்டேட் கும்பலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயும் புகார் கொடுத்துள்ளார். அதுவும் விசாரணையில் இருப்பதாகவும், அது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

 

Post a Comment