பாலாவின் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடித்த அவன் இவன் கடந்த வெள்ளியன்று வெளியானது.
இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீனைப் பற்றியும் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலைப் பற்றியும் சில காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவை ஜமீனையும் தெய்வத்தையும் கிண்டலடிக்கும் விதத்தில் உள்ளதாகக் கூறி எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அக்காட்சிகளை நீக்க வேண்டும் என்று சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி வற்புறுத்தினார்.
நெல்லை மாவட்டம் முழுவதும் பாலாவை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. புகழ்பெற்ற சிங்கம்பட்டி ஜமீன் பெயரில் கேரக்டரை உருவாக்கி அவர் மது அருந்துவது போன்றும் நிர்வாணமாக ஓடவிட்டு அடிப்பது போலவும் காட்சிகள் வைத்திருப்பது அவதூறானது என்றும் ஜமீன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் இக்குற்றச்சாட்டுகளை பாலா கண்டுகொள்ளவே இல்லை.
இதையடுத்து அவன் இவன் படத்துக்கு தடை விதிக்கக் கோரி சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதியின் தம்பி தாயப்பராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து சிங்கம் பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி கூறுகையில், “நான் ஆன்மீகத்தில் பற்று கொண்ட ஒரு துறவியாகி நீண்ட நாளாகிறது. எதைப் பற்றியும் கவலைப்படும் மனநிலையில் இல்லை. ஆனால் சிங்கம்பட்டி ஜமீனையும், காரையாறு கோவிலையும் களங்கப்படுத்தி இருப்பதைக் கண்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர். மதுரையில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் ரத்த கையெழுத்திட்டு முதல்ல்வருக்கு மனு அனுப்ப உள்ளனர்.
அவன் இவன் படத்திற்கு தடை விதிக்க கோரி எனது தம்பி தாயப்ப ராஜா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். எனது மகன் ராஜாவும் வழக்கு தொடர உள்ளார்,” என்றார்.
தென் மாவட்ட மக்களின் குல தெய்வமான சொரிமுத்து அய்யனாரை களங்கப்படுத்திய நடிகர் ஆர்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Post a Comment