7/28/2011 3:42:53 PM
'ராணா பட ஷூட்டிங் அக்டோபர் 3ம் தேதி முதல் தொடங்குகிறது. ஐதராபாத்தில் நடைபெற உள்ள இப்பட ஷூட்டிங்கில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கிறார். ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடிக்கும் படம் 'ராணா'. கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். கடந்த ஏப்.29ம் தேதி இப்படத்தின் தொடக்க விழாவுடன் ஷூட்டிங் தொடங்கியது. அப்போது ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக போரூரிலுள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். சிறுநீரக கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதால் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றார் ரஜினி. சிகிச்சை முடிந்து கடந்த 13ம் தேதி சென்னை திரும்பினார். டாக்டர்கள் அறிவுரைப்படி அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில் 'ராணா பட ஷூட்டிங் விரைவில் தொடங்குவது பற்றி ரஜினியும், இயக்குனர் ரவிகுமாரும் ஆலோசனை நடத்தினர். அக்டோபர் 3ம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்கி தொடர்ந்து 100 நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரஜினி பங்கேற்கும் காட்சிகள், அவ்வப்போது சில நாள் இடைவெளி விட்டு படமாக்கப்படும். இதற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் பல லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது. மன்னராக ரஜினி நடிக்கும் காட்சிகளுக்காக, பிரமாண்ட கப்பல் செட் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.
ரஜினியுடன் பட ஹீரோயின் தீபிகா படுகோன், கஞ்சா கறுப்பு, சோனு சூட் உள்ளிட்டோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. சண்டை காட்சிகளில் ரஜினி நடிக்க வேண்டியுள்ளதால் அவரது உடல்நலம் கருதி ரிஸ்க்கான காட்சிகளை கிராபிக்ஸில் படமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. படத்தின் பாடல் பதிவு பணியில் ஏ.ஆர்.ரகுமான் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே 4 பாடல்கள் தயாராகிவிட்டதாக ரகுமான் தரப்பில் கூறப்படுகிறது. ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்பதற்கு முன்பும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் சென்று தரிசனம் செய்வது ரஜினியின் வழக்கம். ஷூட்டிங் தொடங்கும் முன் அவர் திருப்பதி செல்கிறார்.
Post a Comment