அதிருப்தி அணி மீது வழக்கு, சிறப்புப் பொதுக்குழு - எஸ்.ஏ.சந்திரசேகரன் அணி மும்முரம்

|


SA Chandrasekaran
சென்னை: தயாரிப்பாளர்கள் பொதுக்குழு நடத்தியது முறையற்றது, சட்டப்படி தவறு. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான தன்னை நீக்கியது செல்லாது என்று வழக்குத் தொடரப் போவதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.

மேலும் முறையான பொதுக்குழுவை கூட்டுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

13.4.2012 வெள்ளிக்கிழமை தினசரி பத்திரிகைளில் ஞாயிற்றுக்கிழமை தயாரிப்பாளர்களுக்கான சிறப்பு கூட்டம் நடத்தப் போவதாக பார்த்தேன். அதைப் பார்த்ததும் இப்படி திடீரென்று கூட்டப்படும் கூட்டம் எல்லோருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, அதை தவிர்த்து விடும்படி நானும் செயலாளர் தேனப்பனும், பொருளாளர் கலைப்புலி தாணுவும் சேர்ந்து ஒரு விளம்பரம் மூலமாகவும், அறிக்கை மூலமாகவும் செயலாளர் முரளிதரனுக்கு தெரியப்படுத்தினோம்.

ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் 15.4.2012 ஞாயிற்றுக் கிழமை அன்று சிறப்புக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அந்த சிறப்புக் கூட்டத்தில் என்னை ஆறு மாதம் சஸ்பெண்டு செய்வதாக அறிவித் துள்ளார்கள். இதை நான் செய்தி மூலம் படித்து தெரிந்து கொண்டேன்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைப்படி ஓட்டுப் போட்டு தலைவராக தேர்வு செய்யப்பட்டவன் நான். தலைவரின் அனுமதியில்லாமல் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் நடத்தியது தவறுதலாகும். இது ஜனநாயகப்படி ஓட்டுப் போட்ட தயாரிப்பாளர்களை அவமதிக்கும் செயல்.

இந்த சிறப்புக் கூட்டத்தில் என்னை ஆறு மாதம் சஸ்பெண்டு செய்திருக்கிறார்கள். ஓட்டுப் போட்டு தேர்வான ஒருவரை சஸ்பெண்டு செய்ய யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. அப்படியே ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் செயற்குழு கூடி முதலில் அவருக்கு ஷோக்காஸ் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும். அவரது பதிலில் திருப்திகரம் இல்லாவிட்டால் பொதுக்குழுவை கூட்டி நடவடிக்கை எடுக்கலாம் என்று பைலா சொல்கிறது.

வெளிநாட்டில்...

நான் தற்போது வெளிநாட்டில் இருக்கிறேன். நான் திரும்பி வந்ததும் சங்க விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டம் நடத்தியவர்கள் மீதும், விதிமுறைகளை மீறி என்னை சஸ்பெண்டு செய்தவர்கள் மீதும் சட்டப்படி வழக்குத் தொடருவேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் எஸ்.ஏ.சந்திசேகரன் கூறியுள்ளார்.
 

Post a Comment