நடிகரும், அரசியல் தலைவருமான சிரஞ்சீவி மீண்டும் திரைப்படங்களில் நடிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அனுமதி கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
டோலிவுட் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியைத் துவங்கி அரசியலில் குதித்தார். பின்னர் அதை காங்கிரஸ் கட்சியோடு இணைத்துவிட்டார். அரசியலில் இருந்தாலும் தொடர்ந்து நடிப்பேன் என்று கடந்த 2009ம் ஆண்டு தெரிவி்ததார். அதைத் தொடர்ந்து தனது 150வது படத்தின் பெயர் அதிநாயகடு என்று அறிவித்து அந்த பெயரை பதிவு செய்தும் வைத்தார்.
ஆனால் அரசியல் பணிகளால் அவருக்கு படத்தில் நடிக்க நேரமில்லை. இதற்கிடையே அதிநாயகடு பெயரை பாலகிருஷ்ணாவுக்கு கொடுத்துவிட்டார். சிரஞ்சீவியின் 150வது படத்தை ஏ.ஆர். முருகதாஸ், எஸ்எஸ் ராஜமௌலி, விவி விநாயக், பூரி ஜெகந்நாத் ஆகியவர்களில் யாரேனும் இயக்கக்கூடும் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. இறுதியாக ஷங்கர் தான் இயக்குகிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.
இந்நிலையில் அவர் படங்களில் நடிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அனுமதி கேட்டுள்ளாராம். நடிப்பதற்கு சோனியா அனுமதிப்பாரா இல்லையா என்பது தான் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.