திவ்யா நடித்த கன்னட படத்துக்கு மதவாதிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஹீரோ உபேந்திரா மன்னிப்பு கேட்டார். உபேந்திரா, திவ்யா நடித்துள்ள கன்னட படம் 'கடாரி வீரா சுரசுந்தராங்கி'. அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் கடந்த வாரம் வெளியானது. இதில் சில காட்சிகள் இந்து கடவுளை சிறுமைப்படுத்துவதாகவும், மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் இருப்பதாக கூறி இந்து மத தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஜ்ரங் தள் மற்றும் ஸ்ரீராம் சேனா ஆதரவுடன் ஸ்ரீவித்யாத்சீஷா தீர்த்த சுவாமிகள் இப்படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் படத்தை நகரங்களில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மத தலைவர்களை ஹீரோ உபேந்திரா சந்தித்து மன்னிப்பு கேட்க முடிவு செய்தார். உடுப்பியில் உள்ள ஷிரூர் மடத்துக்கு நேரில் சென்ற அவர், ஸ்ரீவித்யாத்சீஷா சுவாமிகள் மற்றும் மத தலைவர்களை சந்தித்து பேசினார். 'யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் காட்சிகள் படமாக்கவில்லை. அப்படி புண்படுத்தி இருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என்றார். குறிப்பிட்ட காட்சிகளை படத்தில் இருந்து நீக்குவதாகவும் உறுதி அளித்தார்.
Post a Comment