காதலித்து ஏமாற்றியதாக கழுகு பட இயக்குநர் மீது பெண் புகார்!

|

Girl Files Complaint On Kazhugu Director
சென்னை: தன்னை காதலித்து, திருமணம் செய்வதாக வாக்களித்து ஒன்றாக சுற்றிய பின் கைவிட்டுவிட்டதாக கழுகு பட இயக்குநர் சத்ய சிவா மீது இளம் பெண் புகார் தந்துள்ளார்.

கிருஷ்ணா நாயகனாக நடித்த ‘கழுகு’ படத்தை இயக்கியவர் சத்யசிவா. இந்தப் படத்தைத் தயாரித்த பட்டியல் சேகர் அலுவலகத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார் சிவரஞ்சனி என்ற பெண். படத்தின் இயக்குநரான சத்யசிவாவுக்கும் சிவரஞ்சனிக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது.

ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தார்கள். ஆனால் சத்யசிவாவிடம் திடீர் மனமாற்றம் ஏற்பட்டதாகவும் சிவரஞ்சினியை கைவிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிவரஞ்சனி கூறுகையில், "பட்டியல் சேகர் அலுவலகத்தில் பணியாற்றியபோது ‘கழுகு’ பட இயக்குனர் சத்யசிவாவை சந்தித்தேன். என்னிடம் வலிய வந்து காதலிப்பதாக கூறினார். நான் ஏற்கவில்லை. நீ இல்லாவிட்டால் செத்து விடுவேன் என்று மிரட்டினார். ஒரு கட்டத்தில் அவர் நீ காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் மாடியில் இருந்து குதித்து விடுவேன் என்று கூறி மொட்டை மாடியில் நின்று கொண்டு மிரட்டினார்.

ஒருமுறை தூக்கில் தொங்கப் போவதாக கூறி துப்பாட்டாவை கழுத்தில் மாட்டினார். இப்படி சினிமாவில் வருவதுபோல செய்து காட்டி என் மனதை மாற்றினார். நானும் காதலிக்க துவங்கினேன். என்னை திருமணம் செய்வதாக உறுதி அளித்தார். அவரது பெற்றோரிடம் அழைத்து போய் அறிமுகப்படுத்துவதாகவும் சொன்னார். ஆனால் அதன்படி செய்யவில்லை.

திடீரென என்னை புறக்கணிக்க துவங்கினார். வேறு பெண்களுடன் சுற்றுவதாக அறிந்தேன். இதனால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றேன். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பின் பிழைத்து கொண்டேன். எனக்கு துரோகம் செய்த சத்யசிவா தண்டிக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் போலீசில் புகார் கொடுத்தேன்," என்றார்.

சிவரஞ்சனி மாங்காட்டைச் சேர்ந்தவர். எனவே அவரது புகாரை குமணஞ்சாவடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Close
 
 

Post a Comment