வாலிப வயோதிக அன்பர்களே.....

|

Mid Night Special Televisions Programs
காலையில் அழுகை சீரியல்கள், காமெடி சீன்கள் என கலந்து கட்டி அடிக்கும் தொலைக்காட்சிகளில் இரவு 11 மணிக்கு மேல் அப்படி என்னதான் ஒளிபரப்புகிறார்கள் என்று சேனல் வலம் வந்ததில் சில சுவாரஸ்யமான தகவல்கள் சிக்கின.

24 மணி நேரம் ஒளிபரப்பு என்றைக்கு தொடங்கியதோ அன்றிலிருந்து பாடலோ சினிமாவோ எதையாவது ஒளிபரப்பியே தீரவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றன தொலைக்காட்சிகள். இரவு 11 மணிக்கு மேல் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு தொலைக்காட்சிதான் வடிகாலாக இருக்கிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் அந்த நேரத்தில் அப்படி என்னதான் ஒளிபரப்புகிறார்கள் என்று பார்தோம்.

சன் டிவியில் 11 மணி வரை அழகி சீரியல் போட்டு அழுக வைத்து விட்டு பின்னர் திரை வரிசையை ஆரம்பித்து விட்டார்கள். எம்.ஜி.ஆர் வாரம் தொடங்கி இப்போது கார்த்திக் வாரத்தில் வந்து நிற்கிறார்கள். இரவு 11.30க்கு கார்த்திக் தனது பலத்தை நிரூபிக்க சிலம்பம் சுற்றிக் கொண்டிருந்தார். ரிமோட்டை அவசரமாக மாற்றினேன்.

கலைஞர் டிவியில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இயக்குநர் சுந்தர்.சியும், இயக்குநர் விக்ரமனும் வருங்கால இயக்குநர் ஒருவருக்கு அட்வைஸ் செய்து கொண்டிருந்தனர். அந்த இயக்குநர் அப்பாவித்தனமாக அவர்கள் கூறுவதற்கெல்லாம் நன்றி கூறிக்கொண்டிருந்தார். ஓவர் டூ விஜய் டிவி

விஜய் டிவியில் அவர்களுடைய நிகழ்ச்சியை அவர்களே பல முறை மறு ஒளிபரப்பு செய்வது என்பது அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. அந்த நேரத்தில் சரவணன் மீனாட்சி தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

புதிய தலைமுறையில் நேர்பட பேசு நிகழ்ச்சியில் இலங்கை போர் முடிவுற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி விவாதித்து கொண்டிருந்தனர். கொளத்தூர் மணி, மே 17 இயக்கத்தலைவர் திருக்குமரன், டெக்கான் கிரானிக்கல் நாளிதல் ஆசிரியர் பகவன் சிங் ஆகியோருடன் நிகழ்ச்சி நடத்துநர் மதிவாணன் உரையாடிக்கொண்டிருந்தார்.

சத்யம் தொலைக்காட்சியில் அந்த நேரத்தில் நித்யானந்தாவிற்கு ஆதீனம் பதவி அளித்தது தவறு என்று சிலர் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

தமிழ் நிகழ்ச்சிகளுக்காக மெனக்கெடும் மக்கள் தொலைக்காட்சியில் அந்த நேரத்தில் டெலி ஷாப்பிங்கில் வழுக்கை தலையில் முடி வளர ஆயில் விற்றுக் கொண்டிருந்தனர்.

தென்றல் தொலைக்காட்சியில் வாலிப வயோதிக அன்பர்களே என்று சித்த வைத்தியர் ஒருவர் ஆண்மை குறைபாடு நீங்க ஆலோசனை கூறிக்கொண்டிருந்தார்.

சங்காரா டிவியில் வழக்கம் போய் சாய்ராம் பஜன் போய் கொண்டிருந்தது. இசைச் சேனல்களில் கேட்கவே வேண்டாம் மிட் நைட் மசாலாதான். 12 மணிக்கு மேல ஆகுது கொஞ்சம் டிவியை நிறுத்திட்டு தூங்கேன் என்று குரல் கேட்கவே சத்தம் இல்லாமல் ஆஃப் செய்து விட்டு படுத்துவிட்டேன்.

இதிலிருந்து அறியப்படும் நீதி: பாலைவனத்தில் பட்டப் பகலில் காஞ்சு போன பக்கோடாவை திண்பதும், நள்ளிரவு நேரத்தில் தமிழ் டிவி சேனல்களை பார்ப்பதும் ஒன்றே...

அப்ப மிட் நைட் மசாலா?

அது வேற!
Close
 
 

Post a Comment