இன்று காலை கலைஞர் டிவி தேனும் பாலும் நிகழ்ச்சியில் இளையராஜாவின் குரலில் வெளிவந்த, என்றும் இனிமையான பாடல்களாக ஒளிபரப்பி இசை ராஜாங்கம் நடத்தி விட்டனர்.
லட்சுமி படத்தில் தென்ன மரத்தில் தென்றல் அடிக்க, காதல் ஓவியம் வரைந்து பூமாலையே தோள் சேரவா என அழைத்து, விழியில் விழுந்து, வள்ளி வள்ளி என வந்தான் என துள்ளிப்பாடி, சின்னப்பொண்ணு சேலையில் மயங்கி, அந்த நிலாவத்தான் கையிலே புடிச்சு, இந்த மான் என் சொந்த மான் என சொந்தம் கொண்டாடி, ஒரு ஜீவன் அழைத்தது என காவியம் பாடி, சிறு பொன்மணி அசையும் அது தெரிக்கும் புது இசையில் என கல்லுக்குள் ஈரத்தைத் கண்டு புடிச்சு, செவ்வரளித் தோட்டத்திலே உன்னை நெனைச்சு... ஒரு மணி நேரத்திற்கு ரசிகர்களை கிறங்கடித்து விட்டனர்.
பாடல்களின் வரிசை, அடுத்து என்ன பாடல் வரப்போகிறது என்ற ஆர்வத்தையும் தூண்டிவிட்டு விட்டது. பாடல்களை தவற விடக்கூடாது என இந்த நிகழ்ச்சியின் விளம்பரத்தைக்கூட முழுமையாக பார்த்திருக்கும் வாய்ப்பு அதிகம்.
இளையராஜாவின் இசையால் வெற்றி பெற்ற பெரும்பான்மையான இந்த பாடல்களில் கார்த்திக் தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.
அன்றைய ஹீரோக்கள் தியாகராஜன், முரளி, ராமராஜன் போன்றவர்களுக்கும் ராஜாவின் பாடல்கள் தான் வெற்றியை தேடித்தந்தன. தவிர மற்ற ஹீரோக்கள் பிரபலமாகாத நிலையில் கூட பாடல்களும், படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று அவர்களை உயர்த்தின என்பதை மறக்கக் கூடாது.
இளையராஜாவின் இசை மற்றும் பாடல்களினால் மட்டுமே மாபெரும் வெற்றிபெற்ற படங்கள் வரிசையை கண்முன் நிறுத்தும் வகையிலும் இந்த தேனும் பாலும் நிகழ்ச்சி அமைந்திருந்தது.
சனிக்கிழமை காலை 9 மணிக்கு கலைஞர் டிவி சானலை திருப்பியவர்களுக்கு இளையராஜாவின் இசை மற்றும் குரலில் இனிய காலையாக விடிந்தது!
Post a Comment