மும்பை: குறுக்கு வழியைப் பயன்படுத்தி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு வரி கட்டாமல் ஏய்த்துள்ளார் மகா பணக்கார நடிகரான சயீப் அலிகான்.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஒருவர் வெளிநாட்டில் 2 ஆண்டுகள் தங்கி இருந்த பிறகு, குடியிருப்பு மாற்ற விதிகள் சலுகையின் கீழ், இந்தியாவில் தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக, தனிப்பட்ட சொத்துக்களை சுங்கக் கட்டணம் செலுத்தாமல் இறக்குமதி செய்து கொள்ளலாம்.
இந்த சலுகையைப் பயன்படுத்தி, கேரளாவைச் சேர்ந்த கொலங்கரா மனூனி முகமது என்பவர் கடந்த 2004-ம் ஆண்டில் துபாயில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்தார்.
இன்றைக்கு அந்த சொகுசு கார் பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான் பெயரில் உலா வருகிறது.
உண்மையில் இப்படியொரு காரை இறக்குமதி செய்யும் அளவுக்கு வசதி படைத்தவர் அல்ல இந்த முகமது.
எனவே கார் வாங்குவதற்கான பணத்தை, முகமதுவிடம் துபாயில் வைத்து கொடுத்த நடிகர் சயீப் அலிகான், காரை இந்தியாவில் பெற்றுக் கொண்டிருப்பது அம்பலமாகியுள்ளது. அமலாக்கப்பிரிவு இதுகுறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.
குடியிருப்பு மாற்ற விதிகள் சலுகையைப் பயன்படுத்தி, சொகுசு காரை சுங்க வரி கட்டாமல் இன்னொரு நபர் மூலம் சயீப் அலிகான் வாங்கி இருப்பது மட்டும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு தண்டனை நிச்சயம் என்கிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக சயீப் அலிகானின் வாக்குமூலம் பதிவு செய்யப்படாமல் இருந்தது.
ஆனால் நேற்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முன் ஆஜரானார் சயீப் அலிகான். 3 மணி நேரம் நடந்த இந்த விசாரணையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு வேண்டிய பல விவரங்கள் கிடைத்துள்ளனவாம்.
Post a Comment