‘வழக்கு எண் 18/9’ படத்துக்கு தெற்காசிய திரைப்பட விருது

|

Vazhakku Enn 18 9 Wins At South Asian Film Festival

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகரம் பாரீசில் நடைபெற்ற தெற்காசிய திரைப்பட விழாவில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 திரைப்படம் சிறந்த படத்திற்கான விருது பெற்றுள்ளது.

இயக்குனர் லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்' பட நிறுவனத்திற்காக சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்த படம் ‘வழக்கு எண் 18/9. 2012 ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களில் இந்த திரைப்படம் சிறப்பான வரவேற்பினை பெற்றது.

தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் இந்த படத்திற்கு பல விருதுகள் கிடைத்தன. இந்த நிலையில் தெற்காசிய அளவில் நடந்து வரும் திரைப் பட விழாவில் மிகச் சிறந்த படமாக ‘வழக்கு எண் 18/9′ படம் தேர்வானது.

விழாவின் கடைசி நாள் அன்று இந்த படம் திரையிடப்பட்டது. அப்போது அந்த அரங்கில் இயக்குனர் தயாரிப்பாளர் லிங்குசாமியும், பட இயக்குனர் பாலாஜி சக்திவேலும் இருந்தார்கள். படம் பார்த்தவர்கள் அனைவரும் இயக்குனர் பாலாஜி சக்திவேலை நெகிழ்ச்சியுடன் பாராட்டினார்கள்.

விருது குறித்து கருத்து கூறிய இயக்குநர் பாலாஜி சக்திவேல், தமிழ் படங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. அதிலும் இந்த படத்திற்கு கிடைத்திருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. என்னை பாராட்டிய, வாழ்த்திய எனது சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.

இன்னும் நிறைய தமிழ் படங்கள் சர்வதேச அரங்கில் பேர் பெற வேண்டும் என்பதே என் ஆசை. நான் மட்டுமல்ல தமிழில் பல திறமையான இயக்குனர்கள் இருக்கிறார்கள் என்றார் பாலாஜி சக்திவேல்.

 

Post a Comment