சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் நாளை விஸ்வரூபம் படத்தை பார்க்கிறார். அதன் பிறகே படத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை நீக்கப்படுமா இல்லையா என்பது தெரிய வரும்.
விஸ்வரூபம் படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதாக இருக்கிறது. இஸ்லாமியர்களை மிகவும் கேவலமாகவும், மோசமானவர்களாவும் சித்தரித்துள்ளனர். எனவே இந்தப் படத்தை வெளியிடக் கூடாது. அதை அனுமதிக்க மாட்டோம் என்று இஸ்லாமிய அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
இதையடுத்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு படத்திற்கு தமிழக அரசு 2 வார கால தடை விதித்துள்ளது. இந்தத் தடைய நீக்கக் கோரி கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த வழக்கு நேற்று நீதிபதி வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது கமல்ஹாசன் தரப்பி்ல ஆஜரான வக்கீல்கள், படத்தில் எந்தவிதமான ஆட்சேபகரமான காட்சிகளும் இல்லை. சென்சார் போர்டும் படத்தை அனுமதித்துள்ளது. இந்த நிலையி்ல் படத்தைத் தடை செய்வதற்கு தமிழக அரசுக்கு உரிமை இல்லை எனறு வாதிட்டனர். தமிழக அரசு சார்பில், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை காரணமாக முன்வைக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜனவரி 26ம் தேதியன்று படத்தைப் பார்த்து அதன் பிறகு தீர்ப்பளிப்பதாக உத்தரவிட்டார். அதுவரை ஜனவரி 28ம் தேதி வரை படத்தை திரையிடக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.
அதன்படி நீதிபதி வெங்கட்ராமனுக்காக விஸ்வரூபம் திரைப்படம் நாளை பிரத்யேகமாக போட்டுக் காட்டப்படவுள்ளது. படத்தைப் பார்வையிடும் நீதிபதி அதன் பிறகு தடையை நீக்குவதா அல்லது நீடிப்பதா என்பது குறித்து முடிவெடுப்பார்.
ஒருவேளை தடையை நீடிக்க நீதிபதி உத்தரவிட்டால், படம் வெளியாவது பெரும் சிக்கலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment