பாலாவின் பரதேசி வெளிநாடுகளில் நேற்றே ரிலீஸ்... பார்த்தவர்கள் பாராட்டு!

|

Paradesi Gets Rave Reviews From Viewers   

பாலாவின் பரதேசி திரைப்படம் இன்றுதான் இந்தியாவில் வெளியாகிறது. ஆனால் இந்தப் படம் நேற்று மாலையே வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பகுதிகளில் வெளியாகிவிட்டது.

படம் பார்த்த பலரும் இந்தப் படத்தை வெகுவாக சிலாகிக்க ஆரம்பித்துள்ளனர். பாலா எடுத்த படங்களிலேயே இதுதான் ஆகச் சிறந்த படம் என ஏற்கெனவே இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியதையே இப்போது வழிமொழிந்துள்ளனர்.

பாலா இயக்கத்தில், அதர்வா முரளி, வேதிகா, தன்ஷிகா நடிக்க, ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள படம் இது. சமீபத்தில் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ரியலிட்டி டீஸர் வெளியாகியிருந்தது. அதில் நடிகர் நடிகைகளை பாலா வேலை வாங்கும் விதம் குறித்து பலவித விமர்சனங்கள் எழுந்தன.

இது படத்துக்கு எதிர்மறையான ஒரு விளம்பரமாக அமைந்தது. இந்த நிலையில் படம் வெளியான பிறகு, அதைப் பார்த்தவர்கள் தங்கள் நினைப்பையே முற்றாக மாற்றிக் கொண்டுள்ளனர்.

தமிழில் சிறந்த இயக்குநர் என்றால் மகேந்திரனுக்குப் பின் பாலாதான் என்று சிலர் கூறியுள்ளனர்.

இந்தப் படத்தின் பாதிப்பு மனதைவிட்டு அகல இன்னும் சில நாட்கள் ஆகும் என்றும் கூறியுள்ளனர்.

ஒவ்வொரு காட்சியும் கச்சிதமாக இருப்பதாகவும், யாரும் வில்லனாக இல்லாமல் சூழலுக்கேற்ப வாழும் சாதாரண மனித இயல்புடையவர்களாகவே அமைந்திருப்பதாகவும் பாராட்டியுள்ளனர். நிச்சயம் இந்த ஆண்டின் சிறந்த படம், சிறந்த இயக்குநர் விருது பாலாவுக்குத்தான் என்கிறார்கள்.

பாலாவை கடுமையாக விமர்சனம் செய்யும் பலரும் இந்தப் படத்தை சிலாகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் பலரும் சொல்லியிருக்கும் ஒரே விஷயம் (குறையாக அல்ல..), படத்துக்கு இளையராஜாவின் இசை இருந்திருந்தால் ஒரு காவியம் முழுமை பெற்ற உணர்வு கிடைத்திருக்கும் என்பதுதான். அது யார் கையிலும் இல்லையே!

 

Post a Comment