சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜியின் பிரமாண்ட படமான கோச்சடையான் கேன்ஸ் விழாவில் கலந்து கொள்கிறது. அங்கு வைத்துதான் படத்தின் ட்ரைலரே வெளியிடப்பட உள்ளது. அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினியே வெளியிடப் போகிறார் என செய்திகள் பரபரக்கின்றன.
உலகின் முக்கிய திரைப்படத் திருவிழா கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா. 1946-ம் ஆண்டிலிருந்து நடந்து வரும் விழா இது.
இந்த ஆண்டு மே 15 முதல்26-ம் தேதி வரை இந்த விழா நடக்கிறது. சர்வதேச அளவில் ஏராளமான படங்கள் இங்கே திரையிடப்படுகின்றன. புதிய படங்கள், செய்திப் படங்கள், குறும்படங்கள், முன்னோட்ட காட்சிகளை இங்கே வெளியிடவும் கேன்ஸ் விழா வாய்ப்பளிக்கிறது.
ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க, சௌந்தர்யா ரஜினி இயக்க, வரும ஜுலையில் வெளியாகப் போகும் கோச்சடையானின் முதல் முன்னோட்டக் காட்சியை கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட முடிவு செய்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக இந்த விழாவில் பங்கேற்று, கோச்சடையானின் சர்வதேச முன்னோட்டக் காட்சியை வெளியிடுகிறார். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான டாக்டர் முரளி மனோகர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழ் திரைப்படம் ஒன்றின் முன்னோட்டக் காட்சி கேன்ஸில் வெளியாவது இதுவே முதல் முறை!
Post a Comment