ஹைதராபாத்: பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் நந்தகிஷோர் மனைவி இரு குழந்தைகளுடன் மாயமானார். அவரைக் கண்டுபிடித்துத் தருமாறு போலீசில் புகார் செய்துள்ளனர்.
தெலுங்கில் பல படங்களை தயாரித்தவர் நந்தகிஷோர். இவரது மனைவி பெயர் நீரஜா (26). இவர்களுக்கு பிரேம்சத்ய யாதவ், புனித்யாதவ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் ஹைதராபாத் போர்பந்தா பகுதியில் உள்ள வி.ஆர்.ஆர். நகரில் வசித்து வருகிறார்கள்.
நந்தகிஷோரின் சொந்த ஊர் திருப்பதி. எஸ்.எஸ்.பிலிம் பேக்ட் என்ற பெயரில் இங்கிருந்துதான் அவர் படங்களை தயாரித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந்தேதி நீரஜா தனது 2 மகன்களுடன் வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
நந்தகிஷோர் உறவினர் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களை மனைவி-குழந்தைகளைத் தேடிப் பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் எஸ்.ஆர்.நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து நீரஜாவையும், மகன்களையும் தேடி வருகின்றனர்.
Post a Comment