உண்ணாவிரதத்துக்கு வரவே இல்லை விஜய்... ஆஸ்திரேலியாவில் ஷூட்டிங்கில் பிஸியாம்!

|

Vijay Is The Notable Absent Nadigar Sangam Fast

சென்னை: சென்னையில் நடிகர் சங்கம் ஈழத் தமிழருக்காக நடத்திய உண்ணாவிரதத்தில் ஆப்சென்டான மிக முக்கியமான ஒருவர் நடிகர் விஜய்.

ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டாரே தன் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல், கொளுத்தும் வெயிலில் சில மணி நேரங்கள் வந்து அமர்ந்துவிட்டு, தன் ஆதரவைத் தெரிவித்துச் சென்றார்.

அஜீத், சூர்யா, கார்த்தி உள்பட பெரும்பாலான நடிகர்கள் தங்கள் ஆதரவை நேரில் தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் விஜய் மட்டும் வரவில்லை. இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடம் கேட்டபோது, "தலைவா பட ஷூட்டிங்குக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார் விஜய். அதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை," என கடிதம் அனுப்பியுள்ளார் என்றார்.

இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வசதியாகத்தான் உள்ளூர், வெளியூர்களில் நடக்கும் அனைத்து படப்பிடிப்புகளையும் ரத்து செய்வதாக நடிகர் சங்கம் அறிவித்தது. மேலும் இது வெளிநாடுகளில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கும் பொருந்தும் என்றனர்.

இதனால் தன் சீனப் பயணத்தை ஒத்தி வைத்துவிட்டு படப்பிடிப்பில் பங்கேற்றார் விக்ரம். சூர்யாவும் அஜீத்தும் தன் படப்பிடிப்புகளை தள்ளி வைத்துவிட்டு இடையில் இந்த உண்ணாவிரதத்துக்காக கிளம்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவே ரஜினி இந்த உண்ணாவிரதத்துக்கு வராமல் காரணம் கூறியிருந்தால், காற்றில் கத்தி சுழற்றும் இந்த காகித போராளிகள் என்னமா பொங்கியிருப்பார்கள் என்பது உண்ணாவிரதத்தைப் பார்க்க வந்தவர்களின் முணுமுணுப்பாக இருந்தது!

 

Post a Comment