சென்னை: படங்கள் தோற்றதால் இமயமலைக்குப் பயணம் போவதாக வந்த தகவல்கள் என்னை அதிர்ச்சியடைய வைத்தன. இதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்து விளக்கம் சொன்னேன், என்று கூறியுள்ளார் நடிகர் விஷால்.
நேரம் நன்றாக இல்லாவிட்டால் விளக்கெண்ணெய் தடவிக் கொண்டு விழுந்து எழுந்தாலும் ஒட்டாது என்பார்கள். கிட்டத்தட்ட அப்படியொரு நேரம் விஷாலுக்கு.
அவர் என்ன சொன்னாலும் சர்ச்சையாகிவிடுகிறது. சமீபத்தில் விஸ்வரூபம் படம் குறித்து அவர் சொன்ன ஒரு கருத்தால், அவரை சங்கத்திலிருந்தே நீக்கப் போகிறோம் என நடிகர் சங்கம் அறிவிக்கும் அளவுக்குப் போய்விட்டது.
அடுத்து ரஜினி பாணியில் ஆண்டு தோறும் இமயமலைக்குப் போகிறார் விஷால் என்று வெளியான செய்திகளால் கொஞ்சம் டென்ஷனாகிவிட்டார். படங்கள் எதுவும் ஓடாததால் இப்படி அவர் இமயமலை போவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள விஷால், "என்னைப் பற்றி என்னென்னமோ வருகின்றன. நான் அதையெல்லாம் கவனிப்பதில்லை. ஆனால் நான் இமயமலை போவது குறித்து ரஜினி சாருடன் இணைத்து எழுதியிருப்பது அதிர்ச்சியைக் கொடுத்தது.
இதுகுறித்து சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து விளக்கம் சொன்னேன். அவரைப் புண்படுத்தும்படி எதையும் நான் செய்யவில்லை என்று விளக்கினேன்.
இனி ஆண்டுதோறும் என்பதை விட, ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் இமயமலை போகப் போகிறேன்," என்றார்.
Post a Comment