நாட்டில் வறட்சி வந்ததற்கு நாம்தான் காரணம்! - விவேக்

|

Actor Vivek Blames Public Drought

கோவை: நாட்டில் வறட்சி வந்ததற்கு நாம்தான் காரணம். வறட்சியைப் போக்க உதவும் வகையில் வரும் ஆண்டுகளில் 1 கோடி மரக் கன்றுகளை நடப் போகிறேன், என்று நடிகர் விவேக் தெரிவித்தார்.

மேட்டுப்பாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா, பசுமை கலாம் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாளையொட்டி சுவாமி விவேகானந்தர் ரத யாத்திரை மற்றும் மரம் நடும் விழா நடந்தது.

விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர் விவேக் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, " டாக்டர் அப்துல் கலாம் இட்ட பணியான நாடு முழுவதும் மரம் வளர்தக்கும் திட்டத்தில், இதுவரை 18.5 லட்சம் மரக் கன்றுகள் நட்டுள்ளோம்.

ஆனால் எனது இலக்கு ஒரு கோடி என்பதை மனதில் எண்ணி அதனை செயல்படுத்தி ஈடுபட்டு வருகிறேன்.

மேட்டுப்பாளையம் நகரில் கம்பி வலையோடு பத்தாயிரம் மரக்கன்றுகள் நட சிறிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை பள்ளி, கல்லூரிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை நடத்தி மாணவர்கள் மத்தியில் மரத்தை பற்றியும், மழையை பற்றியும் பேசி வந்தேன். தற்போது பொதுமக்கள் கூடுகிற இடங்களில், சாலைகளில் மரக்கன்றுகள் நட முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன்.

மேட்டுப்பாளையம் நகரில் பொது இடங்களில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப் போகிறோம். பொது இடத்தில் மரம் நடுவது என்பது இது தான் முதல் முறை. அதுவும் மேட்டுப்பாளையம் நகரில்தான் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இன்று நாம் நடும் மரக்கன்றுகள் 5 ஆண்டுகளில் நிழல் தரும் மரங்களாக வளர்ந்து விடும். மாறி வரும் காலத்திற்கேற்பவும். வெயிலை தாங்கக்கூடிய வேம்பு, பூவனி, வாகை ஆகிய மரங்கன்றுகளை நட்டு வருகின்றோம்.

நாட்டில் வறட்சி வந்ததற்கு நாம்தான் காரணம். பூமித்தாயின் அழகிய முகம் கோரமாக ஏற்பட்டதற்கு காரணம் நாம்தான். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் ஆற்று நீர், நிலத்தடி நீர் மாசு பட்டது. கொட்டிய பிளாஸ்டிக் கழிவுகளால் நிலம் மாசுபட்டது.

தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் காற்று மாசுபட்டது. மரத்தை வெட்டுவதால் மழை வளம் குறைந்து வருகிறது. ஒவ்வொரு மரமும் இயற்கையின் கரம். இப்போது நிலைமை ரொம்ப மோசமாக உள்ளது.

நாடு மிக மோசமான நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. விவசாயம் அழிந்து, விளை நிலங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன.

இந்த நிலை மாற முதலில் மக்கள் மனப்பான்மை மாற வேண்டும். விவசாயத்தின் மீது மீண்டும் அக்கறை காட்ட வேண்டும். இளைஞர்களே, மாணவர்களே.. விவசாயத்துக்கு மீண்டும் திரும்புங்கள்," என்றார்.

 

Post a Comment