மது அருந்துவது, புகைக்கும் காட்சிகளில் நடிக்காத எம்ஜிஆர் கடவுளாகப் பார்க்கப்பட்டார்! - நீதிபதி

|

Hc Judge Hails Mgr Sivaji Movies Its Honest And Content

சென்னை: மது அருந்துவது, புகைப் பிடிப்பது போன்ற காட்சிகளில் ஒருபோதும் நடிக்காத எம்ஜிஆரை மக்கள் கடவுளாகப் பார்த்தனர். இறக்கும் வரை அவரை முதல் அமைச்சராகவே உயர்த்தி வைத்தனர், என்று உயர்நீதிமன்ற நீதிபதி என் கிருபாகரன் கூறினார்.

மடிசார் மாமி படத்துக்கு இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், இன்றைய படங்களின் கதை, ஹீரோக்களின் தன்மை மற்றும் தலைப்புகளை ஒரு பிடிபிடித்தார்.

நீதிபதி தன் உத்தரவில், "பாசமலர், பணமா பாசமா, அன்புக் கரங்கள், தாய் சொல்லை தட்டாதே, திருடாதே, எதிர் நீச்சல், கப்பலோட்டிய தமிழன் என்று கடந்த காலங்களில் படங்கள் வெளியாயின. சட்டத்தை மதிப்பவர்களாகவும், கடின உழைப்பாளியாகவும், நேர்மை, அர்ப்பணிப்பு உடையவர்களாகவும் கதாநாயகர்கள் சித்தரிக்கப்பட்டனர். இதனால்தான் அந்த கால கதாநாயகர்கள் கடவுளாக வணங்கப்பட்டனர்.

மது அருந்துவது போலவும், புகைப்பிடிப்பது போலவும் என்றுமே நடிக்காத எம்.ஜி.ஆரை இறக்கும் வரை முதல்- அமைச்சராக மக்கள் உயர்த்தி வைத்தனர். இன்றைக்கு குற்றங்கள் செய்யும் கதாநாயகர்கள் கடைசியில் தப்பி விடுவது போல காட்டுகிறார்கள். கதாநாயகர்களை பின்பற்ற அவர்களின் ரசிகர்கள் விரும்புவதால் நாட்டில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

பணம் சம்பாதிக்க செக்ஸ், வன்முறை கொடூர காட்சிகளை காட்டுவதால் சமூகம் பாதிக்கப்படுகிறது. திருட்டு பயலே, கேடி பில்லா கில்லாடி ரங்கா, போக்கிரி, சண்டைகோழி, மங்காத்தா, ரத்த சரித்திரம் என்ற தலைப்புகளில் படங்கள் வருகின்றன. நல்ல தலைப்புகளை படங்களுக்கு வைக்க வேண்டும். தணிக்கை துறை செயல்படுகிறதா என்று நம்புவதற்கு கடினமாக உள்ளது," என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த உத்தரவு திரைத்துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் படத் தலைப்புகளை மறுபரிசீலனை செய்யவும் தயாராகி வருகின்றனர் மனசாட்சியுள்ள சில தயாரிப்பாளர்கள்.

 

Post a Comment