குவியும் மோசடி புகார்கள்: நடிகர் சங்கத்திலிருந்து பவர் ஸ்டார் நீக்கம்?

|

Powerstar Be Dismissed From Nadigar Sangam

சென்னை: தொடர்ந்து மோசடி புகார்கள் குவிவதால், பவர் ஸ்டார் சீனிவாசனை நடிகர் சங்கத்திலிருந்து நீக்க ஆலோசித்து வருகின்றனர்.

லத்திகாவில் நாயகனாகவும் இயக்குநராகவும் அறிமுகமான பவர் ஸ்டார் சீனிவாசன், தொடர்ந்து 9 படங்களில் ஹீரோவாகவும், 20 க்கும் மேற்பட்ட படங்களில் கெஸ்ட் ரோல்களிலும் நடித்து வருகிறார்.

நடிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் பொறுப்பேற்ற அவர், இயக்குநர் சங்கத்திலும் உறுப்பினராகியுள்ளார்.

கடந்த வருடம் மோசடி புகார் ஒன்றில் பவர் ஸ்டார் கைதானதும் செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது சங்கத்தில் சாதாரண உறுப்பினராக உள்ளார்.

கடந்த சில வாரங்களாக பவர் ஸ்டார் சீனிவாசன் மீது ஏராளமான மோசடி புகார்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குவிந்த வண்ணம் உள்ளன. கடன் வாங்கி தருவதாக கோடிக் கணக்கில் பணத்தை சுருட்டி விட்டதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. பவர் ஸ்டாரை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது குண்டர் சட்டம் பாயலாம் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

எனவே நடிகர் சங்கத்தில் இருந்து பவர் ஸ்டார் சீனிவாசனை நீக்க வேண்டும் என்று நடிகர்கள் வற்புறுத்த ஆரம்பித்துள்ளனர்.

வரும் 30ம் தேதி நடக்கும் நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் பவர் ஸ்டாரை நீக்க தீர்மானம் நிறைவேற்றப்படும் என்கிறார்கள்.

 

Post a Comment