இளையராஜா கையாலதான் எங்களுக்கு பணிநியமன ஆணை வேணும்! - அடம்பிடித்து சாதித்த மாணவர்கள்

|

Students Adamant Receive Appointment Ilayarajaa

இசைஞானி இளையராஜாவின் கையால்தான் எங்களுக்கு கல்விச் சான்றிதழ் வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் அடம் பிடித்ததால், அவர்களுக்கு தனது ஸ்டுடியோவில் வைத்து சான்றிதழ் வழங்கினார் இளையராஜா.

தலைமுறைகளைத் தாண்டிய இசையைத் தந்தவர் இசைஞானி இளையராஜா. அவரது பாடல்களை கருவிலிருக்கும்போதே அதிகமாக கேட்டதாலோ என்னமோ, இப்போது பிறந்த பிள்ளைகள் கூட ராஜா பாட்டுக்கு தாளம் போடுகிறார்கள்.

இந்த 38 ஆண்டுகளில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்துபோனாலும், இளையராஜா மட்டுமே இசையமைப்பாளர்களில் ராஜாவாக கோலோச்சுகிறார்.

இன்றைய தலைமுறை மத்தியில் அவரது ஆளுமை எப்படி இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சமீபத்தில் இளையராஜாவின் இசைப் பதிவுக் கூடம் உள்ள பிரசாத் ஸ்டுடியோவுக்கு வந்திருக்கிறார்கள்.

அந்தக் கல்லூரியில் பட்டம் பெற்று, கல்லூரி மூலமே பணிக்கான நியமன ஆணையையும் பெற்றுள்ளனர் மாணவர்கள். ஆனால் அந்த ஆணையை இசைஞானி இளையராஜா கைகளால் பெற்றால் பெரிய ஆசீர்வாதம் கிடைத்த மாதிரி இருக்கும் என்று கருதினர்.

இது சாத்தியமா? அவர் சம்மதிப்பாரா? என நிர்வாகத்தினர் கேட்டபோது, "நாங்கள் எல்லோருமே நேரில் போய் அவரைப் பார்க்கிறோம். அவர் சம்மதித்தால் சந்தோஷமாக பெற்றுக் கொள்கிறோம். இல்லாவிட்டால் நேரில் அவரைப் பார்த்து ஆசி பெற்றுக் கொள்வோம்," என்று கூறிவிட்டு வந்தார்களாம்.

ஆனால் மாணவர்களை ஏமாற்றுவாரா ராஜா? வந்த அத்தனை பேரையும் உள்ளே அழைத்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் பணி நியமன ஆணை கொடுத்து படம் எடுத்துக் கொண்ட பிறகே அனுப்பி வைத்தாராம்.

சம்பந்தப்பட்ட கல்லூரி அதை பெரிய விளம்பரமாக்கிக் கொண்டது தனிக் கதை!!

 

Post a Comment