லீனா மரியா பால் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்.. போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு!

|

Leena Appear Before Chennai Court On Friday

சென்னை: பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள பிரபல நடிகை லீனா மரியா பால் நாளை சென்னையில் நீதிமன்றத்தில் ஆஜராகிறார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போலீஸ் திட்டமிட்டுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த சுகாஷ் சந்திரசேகர் சென்னையில் உள்ள கனரா வங்கியில் ரூ. 19 கோடியை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி விட்டார். இந்த மோசடியில் அவருக்கு துணையாக இருந்தவர் லீனா. இருவரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். டெல்லியில் சுகாஷ் தங்கி இருப்பதாக ஒரு ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

சென்னை போலீசும் டெல்லி போலீசும் இணைந்து ரகசியமாக திட்டமிட்டு நேற்று முன்தினம் இருவரையும் டெல்லி பண்ணை வீட்டில் சுற்றி வளைத்தனர்.

போலீசார் வீட்டிற்குள் நுழைந்த போது அங்கு நடிகை லீனா மரியாபால் இருந்தார். அவரிடம் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அவர் கூறியுள்ளார்.

சுகாஷ் மோசடிக்கு லீனாவும் உடந்தையாக இருந்துள்ளார். அதனால் அவரை கைது செய்து டெல்லியில் இருந்து சென்னை கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீஸ் பாதுகாப்புடன் நடிகை லீனா இன்று இரவு சென்னை வருகிறார்.

இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதன் பின்னர் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அதனால் அவரை நாளை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்துகிறார்கள்.

மோசடி மன்னன் சுகாஷுக்கு வைத்த குறியில் நடிகை லீனா சிக்கியுள்ளது போலீசாருக்கு பெரும் துருப்பு சீட்டாக உள்ளது. மோசடி செய்த பணத்தை நடிகையுடன் உல்லாசமாக இருந்து அவன் செவழித்துள்ளான். ஆடம்பர கார், சொகுசு வீடுகளில் தங்கி ராஜபோக வாழ்க்கையை சுகாஷ் அனுபவித்து வருகிறான்.

மோசடி செய்த பணம் குறித்து நடிகையிடம் அடுத்த கட்ட விசாரணை நடத்த உள்ளனர். அப்போதுதான் இந்த மோசடியில் நடிகையின் பங்கு என்ன? அவர் எந்த வகையில் உதவி செய்துள்ளார். அவருக்கும் இந்த மோசடிக்கும் என்ன தொடர்பு என்பது போன்ற விவரங்கள் தெரிய வரும்.

இதற்கிடையில் பண்ணை வீட்டிலிருந்து தப்பி ஓடிய சுகாசை பிடிக்க போலீஸ் படை விரைந்துள்ளது. டெல்லியைவிட்டு அவன் தப்ப முடியாத அளவுக்கு வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment