என்ன ஆனார் நண்பன் படத் தயாரிப்பாளர் ரவிசங்கர் பிரசாத்? - 4 நாட்களாக தீவிர தேடுதல்!

|

ஜெமினி பிலிம் சர்க்யூட் பட நிறுவனம் சார்பில் பல படங்களைத் தயாரித்தவரும் தொழிலதிபருமான ரவிசங்கர் பிரசாத் கடந்த நான்கு தினங்களாக மாயமாகிவிட்டதால், அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ரவிசங்கர் பிரசாத் தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான தயாரிப்பாளர். சென்னையில் குடும்பத்துடன் வசித்தார். இவர் மறைந்த திரையுலக ஜாம்பவான் எல்.வி.பிரசாத்தின் பேரன்.

ஜெமினி பேனரில் கமல் நடித்த வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., விஜய் நடித்த நண்பன், தனுஷ் நடித்த மயக்கம் என்ன படங்களை ரவி சங்கர் பிரசாத் தயாரித்துள்ளார். தற்போது விஷால் நடிக்கும் மதகஜராஜா படத்தை தயாரித்து வந்தார். மணி ரத்னம் இயக்கிய கடல் படத்தையும் வாங்கி வெளியிட்டவரும் இவர்தான்.

ஆனந்த ரீஜென்ஸி என்ற பெயரில் ஓட்டல்களும் நடத்தி வருகிறார். ஆந்திர மாநிலத்தையொட்டி உள்ள புதுச்சேரி மாநில பகுதியான ஏனாமில் உள்ள தனது ஓட்டலை பார்வையிடச் சென்ற அவர் அங்கு அதிகாலை 3 மணிக்கு வாக்கிங் போயிருக்கிறார். பிறகு அவர் ஓட்டலுக்கு திரும்பவில்லை.

இதுகுறித்து ஏனாம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிசங்கர் பிரசாத் கடத்தப்பட்டாரா? அல்லது அருகில் உள்ள ஆற்றில் தவறி விழுந்தாரா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிகாலை 3 மணிக்கு யாரும் வாங்கிங் செல்லமாட்டார்கள். அந்த நேரத்தில் அவர் ஏன் சென்றார் என்பது மர்மமாக உள்ளது என்று ஏனாம் போலீஸ் சந்தேகிக்கிறது.

சமீப காலமாக அவர் வாங்கி வெளியிட்ட படங்கள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதால் அவர் மாயமானரா? அல்லது யாரேனும் கடத்தினார்களா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Post a Comment