கொல்லம்: காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குருப்பு மீது கொடுத்த பாலியல் சில்மிஷப் புகாரைத் திரும்பப் பெறாவிட்டால் வருமான வரி சோதனை வரும் என்று கூறி மிரட்டல்கள் வந்ததால்தான் நடிகை ஸ்வேதா மேனன் தான் கொடுத்த புகாரைத் திரும்பப் பெற்றதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி பீதாம்பர குருப்பு. இவருக்கு வயது 73 வயதாகிறது. கொல்லத்தில் நடந்த படகுப் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வந்த ஸ்வேதாவை உரசியும், அடிக்கடி அருகில் போய் நெருக்கமாக நின்றும் இவர் சில்மிஷம் செய்ததாக சர்ச்சை எழுந்தது.
ஸ்வேதாவும், தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும், பலமுறை தான் தேவையே இல்லாமல் தொடப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் குருப்பு மீது போலீஸிலும் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால் சில மணி நேரங்களிலேயே தனது புகாரைத் திரும்பப் பெறுவதாக அறிவித்த ஸ்வேதா அடுத்த நாள் போலீஸில் கொடுத்த புகாரைத் திரும்பப் பெற்றார்.
இப்படி திடீரென ஸ்வேதா மாறியதற்கு பின்ணியில் ஏதோ நடந்திருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் சர்ச்சைக் கிளப்பியுள்ளனர். இதுகுறித்து முன்னாள் முதல்வரான அச்சுதானந்தன் கூறுகையில், ஸ்வேதா மேனன் புகாரை வாபஸ் பெற்ற பின்னணியில் ஏதோ ஒரு மர்மம் உள்ளது. அது என்ன என்பதை அவர்தான் தெரிவிக்க வேண்டும் என்றார். மேலும், கேரள காங்கிரஸ் கட்சியினர் சுவேதா மேனனை மிரட்டி புகாரை வாபஸ் பெறச் செய்துள்ளனர் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் குற்றம் சாட்டினர்.
இதற்கிடையே, காங்கிரஸ் தரப்பிலிருந்து, ஸ்வேதா மேனன் சொத்துக்கள் குறித்து வருமான வரி விசாரணை வரும், ரெய்டு வரும் என மிரட்டல்கள் வந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதற்குப் பயந்துதான் எதற்குப் பிரச்சினை என்று தனது புகாரை ஸ்வேதா திரும்பப் பெற்று விட்டதாக பேச்சு அடிபடுகிறது.
இடையில் என்ன நடந்தது என்பதை ஸ்வேதாதான் விளக்க வேண்டும்.
Post a Comment