சென்னை: சர்வதேச படவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில், தங்க மீன்கள்-ஹரிதாஸ் ஆகிய 2 படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
11-வது சர்வதேச படவிழா, சென்னையில் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. நடிகர்கள் கமல்ஹாசன், அமீர்கான் ஆகிய இருவரும் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்கள். 8 நாட்களாக நடந்த இந்த விழாவில், 58 நாடுகளை சேர்ந்த 163 படங்கள் திரையிடப்பட்டன.
தங்க மீன்கள்
நிறைவு நாள் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று இரவு நடந்தது. அதில், கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில், ராம் இயக்கி, ஜே.சதீஷ்குமார் வெளியிட்ட ‘தங்க மீன்கள்' படத்துக்கு முதல் பரிசு கிடைத்தது. அந்த படத்தை வெளியிட்ட ஜே.சதீஷ்குமாருக்கு ரூ.1 லட்சமும், இயக்குநர் ராமுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்பட்டது.
‘ஹரிதாஸ்'
டாக்டர் ராமதாஸ் தயாரித்து, ஜி.என்.ஆர்.குமரவேலன் டைரக்டு செய்த ‘ஹரிதாஸ்' படத்துக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. தயாரிப்பாளர் டாக்டர் ராமதாஸ், டைரக்டர் ஜி.என்.ஆர்.குமரவேலன் ஆகிய இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.
பாலா டைரக்டு செய்த ‘பரதேசி' படத்தில் நடித்தற்காக அதர்வாவுக்கு விசேஷ விருது வழங்கப்பட்டது. ‘தங்க மீன்கள்' படத்தில் நடித்த சிறுமி சாதனா, ‘ஹரிதாஸ்' படத்தில் நடித்த சிறுவன் பிருதிவிராஜ் ஆகிய இருவருக்கும் சிறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இசையமைப்பாளர் அனிருத்துக்கு அமிதாப்பச்சன் விருது வழங்கப்பட்டது.
Post a Comment