பெய்ஜிங்: ஜாக்கி சானின் போலீஸ் ஸ்டோரி 6 படத்துக்கு குவியும் வசூல் காரணமாக, சீனாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 27 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஜாக்கிசான் நடித்த ‘போலீஸ் ஸ்டோரி' -6 சீனா, ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சமீபத்தில் திரைக்கு வந்தது. அதில், சீனாவில் மட்டும் இந்த படம் 106 மில்லியன் டாலர்களைக் குவித்து சாதனைப் படைத்துள்ளது. முதல் வாரத்தில் மட்டும் 26 மில்லியன் டாலர்களை ஈட்டியது இந்தப் படம்.
இதனால் சீனாவின் சினிமா துறை வருவாய் 27 சதவீதம் அதிகரித்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.
18500 திரையரங்குகளைக் கொண்ட சீன நாட்டில், கடந்த ஆண்டு சினிமா துறை வருமானம் 3.6 பில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மட்டும் 5077 அரங்குகள் புதிதாகக் கட்டப்பட்டன!
போலீஸ் ஸ்டோரி 6 படத்தில் ஜாக்கிசான் போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார். ஆட்சியாளர்களை பணிய வைக்க ஜாக்கிசானின் மகள் உள்பட 33 பேர்களை சர்வதேச தீவிரவாதிகள் கடத்தி விடுகிறார்கள். அந்த 33 பேர்களையும் தீவிரவாதிகளிடம் இருந்து ஜாக்கிசான் எப்படி காப்பாற்றுகிறார்? என்பதே கதை.
முதன்முதலாக ஜாக்கிசான் சொந்த குரலில், ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
இந்த படத்தை சுரபி பிலிம்ஸ் மோகன் தமிழகத்தில் வெளியிடுகிறார். தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது போலீஸ் ஸ்டோரி 6.
Post a Comment