சென்னை: பில் தொகையைச் செலுத்தாமல் படக்குழுவினரை மும்பை ஓட்டலில் திண்டாட விட்டுள்ளார் தமிழ் சினிமா இயக்குநர் ஒருவர்.
அவர் பெயர் பி ரவிக்குமார். சமீபத்தில் நடிகை சுஜிபாலா விவகாரத்தில் ஏகத்துக்கும் அடிபட்டவர் இந்த ரவிக்குமார். இவரால் தனக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக சுஜிபாலா புகார் தந்தது நினைவிருக்கலாம்.
இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் ரவிக்குமார் சிக்கியுள்ளார். தன் சொந்தத் தயாரிப்பான 'லவ் பண்ணலாமா வேணாமா' படப்பிடிப்பிற்காக இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கொண்ட குழுவை மும்பை அழைத்துச் சென்ற ரவிக்குமார், அவர்களை ஓட்டலிலேயே திண்டாட விட்டுவிட்டு பாதியில் திரும்பி வந்துள்ளார்.
கடந்த புதன்கிழமை மும்பை ஹோட்டல் நிர்வாகத்தினர் ரவிக்குமார் தங்களுக்கு பெருந்தொகை பாக்கி வைத்திருப்பதாகக் கூறி, உடனே அந்தத் தொகையைச் செலுத்தக் கோரினார்.
ஆனால் இதற்கு பதில் எதுவும் அளிக்காத ரவிக்குமார், மறுநாள் யாரிடமும் சொல்லாமல் ஹோட்டலை விட்டு வெளியேறிவிட்டாராம்.
இந்த விஷயம் தெரிய வந்ததும் ஷாக் ஆகிவிட்டார்களாம் படக்குழுவினர். தொடர்ந்து படக்குழுவினருக்கு எந்த சேவையும் தர முடியாது என கூறிவிட்டது ஓட்டல் நிர்வாகம்.
கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு இவர்களுக்கு உணவு கூட தரப்படவில்லை. தங்க மட்டுமே அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து ரவிக்குமாரைத் தொடர்புகொண்டபோது, "படப்பிடிப்புக் குழுவினர் மும்பை ஷூட்டிங்கில் இருக்கிறார்கள். தேர்தல் சமயம் என்பதால் தன்னால் ஹோட்டல் பாக்கியை செலுத்த முடியவில்லை," என்று தெரிவித்தார்.
இப்போது கிடைத்துள்ள தகவல்படி, ஓட்டல் பாக்கியைச் செலுத்த ரவிக்குமார் ஒப்புக் கொண்டுள்ளாராம். எனவே படக்குழுவினருக்கு சேவைகளைத் தொடர்கிறது ஓட்டல் நிர்வாகம்.
Post a Comment