1000 படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு மும்பையில் பாராட்டு விழா

|

இந்திய சினிமாவில் தனி ஒரு இசையமைப்பாளராக ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனைப் படைத்துள்ள இளையராஜாவை கவுரவிக்க மும்பையில் விழா எடுக்கிறார்கள்.

இதில் அமிதாப் பச்சன், லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

1000 படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு மும்பையில் பாராட்டு விழா

மேஸ்ட்ரோ, இசைஞானி என அன்புடன் அழைக்கப்படும் இளையராஜா, 1976-ம் ஆண்டு அன்னக்கிளி படத்தில் தன் இசைப் பயணத்தைத் தொடங்கினார்.

இந்த 39 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். பாலா இயக்கி வரும் தாரை தப்பட்டை அவரது 1000வது படம். இப்போதும் இருபது படங்களுக்கு மேல் இசையமைத்து வருகிறார்.

அவரது இந்த சாதனையை கவுரவிக்கும் வகையில், பாராட்டு விழா நடத்த பாலிவுட் தயாரிப்பாளர் பால்கி முடிவு செய்துள்ளார். பாலிவுட்டின் பிரபல இயக்குனரான பால்கி இயக்கத்தில் வெளிவந்த சீனி கம், பா ஆகிய இந்தி படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்தார். இப்போது இருவரும் ஷமிதாப் படத்தில் இணைந்துள்ளனர்.

இந்த விழா குறித்து இயக்குநர் பால்கி கூறுகையில், "வரும் ஜனவரி 20 ம் தேதி இந்த விழா மும்பையில் நடக்கிறது. அமிதாப் பச்சன், லதா மங்கேஷ்கர், பி சுசீலா, எஸ் ஜானகி உள்பட பலரும் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள்.

இளையராஜா இசையமைத்த படங்களில் நடித்த பிரபல ஹீரோக்களும் பங்கேற்க உள்ளனர்," என்றார்.

 

Post a Comment