சென்னை: திரிஷா இல்லன்னா நயன்தாரா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த இடத்தில் குவிந்த மக்கள், திரிஷாவும், நயன்தாராவும் எங்கே என்று படப்பிடிப்பு குழுவிடம் கேட்டு அடம் பிடித்த சம்பவம் சென்னை அருகே நடந்துள்ளது.
இசையமைப்பாளரும் டார்லிங் பட ஹீரோவுமான ஜி.வி.பிரகாஷ், கயல் பட நாயகி ஆனந்தி நடித்துவரும் திரைப்படம் 'திரிஷா இல்லன்னா நயன்தாரா'. ஆதிக் ரவிசந்திரன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.தலைநகரம் திரைப்படத்தில் வடிவேல் பேசிய வசனத்தை அடிப்படையாக வைத்து இந்த தலைப்பை இயக்குநர் சூட்டியிருந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னை போரூரை அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் நேற்று நடந்து கொண்டிருந்தபோது, அப்பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோர் சூட்டிங் ஸ்பாட்டில் குவிந்துள்ளனர். எல்லோர் முகத்திலும், அதிலும் குறிப்பாக ஆண்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. என்ன எதிர்பார்ப்பு என்கிறீர்களா...? திரிஷா இல்லன்னா நயன்தாரா சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருப்பார்கள், அவர்களை பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்புதான் அது.
ஆனால் பார்த்து... பார்த்து.. கண்கள் பூத்தும், நயனையும் காணோம், திரிஷாவும் மிஸ்சிங். விரக்தியடைந்த ரசிகசிகாமணிகள், எங்கப்பா... எங்க ஆளுங்கள கண்ணுலயே காட்ட மாட்டேங்கிறீங்களே.. அப்படீன்னு, படக்குழுவிடம் முறுக்கிக் கொண்டனராம். நமட்டுச் சிரிப்பு சிரித்த படக்குழுவினர், திரிஷாவும், இல்லை நயன்தாராவும் கிடையாது. எங்கள் படத்தின் தலைப்பில் மட்டும்தான் அவர்கள் இருப்பார்கள் என்றார்களாம்.
ரசிகர்கள் முகத்தில் ஈயாடவில்லையாம். சரி வந்ததுதான் வந்தீங்க, அங்க பாருங்க எங்க படத்தோட ஹீரோயின் என்று ஆனந்தியை காண்பித்துள்ளனர். கயல் விழியழகி ஆனந்தியை பார்த்த மகிழ்ச்சியில், திரிஷா இல்லன்னா நயன்தாரா என்று நினைத்தோம்.. நயன்தாரா இல்லன்னா ஆனந்தி என்று கூறிக்கொண்டு சென்றனராம்.
Post a Comment