திருவனந்தபுரம்: பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்துக்கு அரிவராசனம் விருது வழங்கியுள்ளது கேரள அரசாங்கம்.
கேரள அரசு சார்பில் ஆண்டு தோறும் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் விழாவில், இந்த அரிவராசனம் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் விருது குறித்து கேரள தேவசம் போர்டு துறை மந்திரி வி.எஸ். சிவகுமார் கூறியிருப்பதாவது:-
நீண்ட காலம் இசை உலகில் சிறந்த பணியாற்றி வரும் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அதிக அளவில் அய்யப்பன் பாடல்களை பாடி, மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளார்.
அய்யனின் புகழ் பாடி உலகெங்கும் பரவச் செய்த அவருக்கு இந்த ஆண்டின் அரிவராசனம் விருது வழங்க தீர்மானித்துள்ளது.
சபரிமலை சிறப்பு அதிகாரி கே. ஜெயக்குமார் தலைமையிலான தேர்வுக்குழு இந்த ஆண்டுக்கான விருது பெறுவோரை பரிசீலனை செய்து பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை தேர்ந்தெடுத்தது.
இது தொடர்பாக வருகிற ஜூன் மாதம் சபரிமலை சாஸ்தா கலையரங்கில் நடைபெறும் விழாவில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு அரிவராசனம் விருதும் ரூ.1 லட்சம் மற்றும் நற்சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட உள்ளது," என்றார்.
இதற்கு முன் பாடகர் கே.ஜே.ஏசுதாஸ் உள்பட பலருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment