கொம்பன் படத்துக்கு பிரச்சினை ஏற்படுத்திய புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி மீது வழக்குத் தொடர்ந்துள்ளேன், என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.
கார்த்தி- லட்சுமிமேனன் நடித்த கொம்பன் படம் ஏக பிரச்சினைகளுக்கிடையில் வெளியானது. புதிய தமிழகம் கட்சி இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என வழக்குத் தொடர்ந்தது.
ஆனால் வழக்கு தள்ளுபடி ஆனது. படம் வெளியான 5-ம் நாள் பெரும் வெற்றி பெற்றதாகக் கூறி, செய்தியாளர்களைச் சந்தித்தனர் படக்குழுவினர்.
இந்தப் படத்துக்கு வந்த பிரச்சினைகள் குறித்து ஞானவேல் ராஜா கூறுகையில், "கொம்பன் படப் பிரச்சினையில் நான் மட்டுமல்ல, எங்கள் படக்குழுவினரே 30 நாட்கள் படாத பாடு பட்டோம். குறித்த தேதியில் படம் வருமா என்கிற குழப்பமும் கலக்கமும் எங்களுக்கு இருந்தது.
'கொம்பன்' படத்துக்கு பிரச்சினை வந்த போது நான் 3 பேரிடம் போனேன் . தெய்வத்திடம் போய் முறையிட்டேன். என் அப்பாவிடம் போய் அழுதேன். யாருமற்ற நிலையில் மூன்றாவதாக பத்திரிகை, ஊடகங்கள் உங்களிடம்தான் வந்தேன். சென்சார் செய்யப் பட்ட படத்துக்கு இப்படி ஒரு பிரச்சினை என்ற போது உங்களிடம் வந்தேன். ஆதரவு தந்தீர்கள்.
இது வரை இல்லாத அளவுக்கு இவ்வளவு விரைவில் திரையுலகினர் ஒன்று சேர்ந்து 'கொம்பன்'படத்துக்கு ஆதரவு அளித்தார்கள். திரையுலகினர் இதை என் தனிப்பட்ட ஒருவனின் பிரச்சினையாகப் பார்க்கவில்லை. எதிர்காலத்தில் யாரும் இப்படி பாதிக்கப்படக் கூடாது. என்பதில் உறுதியாக போராட வேண்டியதை உணர்ந்திருக்கிறார்கள்.
படம் வெளியானபிறகு வழக்கமான வசூலைவிட மதுரை வட்டாரங்களில்இப்போது இருமடங்கு வசூலாகி வருகிறது.
எந்தெந்த ஊர்களில் பிரச்சினை பதற்றம் என்று கூறப்பட்டதோ அங்குதான் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு சந்தோஷமாகப் படம் பார்க்க வருகிறார்கள்.
வழக்கு
இந்தப் பிரச்சினை தொடர்பாக கிருஷ்ணசாமி ஐயா மீது வழக்கு போட்டிருக்கிறேன். இதனால் படத்துக்கு எந்தெந்த வகையிலெல்லாம் இழப்பு என்று கணக்கிட்டு கேட்கப்பட்டிருக்கிறது.., " என்றார்.
Post a Comment