தமிழ் சினிமா வரலாற்றில் ஒரே ஒரு வசனத்துக்காக ஒரு படத்தின் ட்ரைலருக்கு அனுமதி மறுத்துள்ளது சென்சார் போர்டு.
அந்தப் படம் உறுமீன்.
பாபிசிம்ஹா கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக ரேஷ்மி மேனன் நடித்துள்ளார். சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியுள்ளார்.
உறுமீன் படத்தின் ‘டிரைலர்' தணிக்கை குழுவினருக்கு நேற்று திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
டிரைலரில் வரும் ஒரு வாசகத்தை அனுமதிக்க முடியாது என்று கூறி, அதை திரையிடுவதற்கு தணிக்கை குழு தடை விதித்துள்ளது. இதுபற்றி இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி கூறுகையில், "உறுமீன் படத்தின் டிரைலரை தணிக்கை குழுவினருக்கு சமீபத்தில் திரையிட்டு காண்பித்தேன்.
அதில், ‘‘பழிவாங்குதல்தான் எப்போதுமே இறுதியானது'' என்ற ஒரு வாசகம் வருகிறது. இதை அனுமதிக்க முடியாது என்று தணிக்கை குழுவினர் கூறிவிட்டார்கள். படத்தின் கதை சம்பந்தப்பட்டு வரும் வசனம் என்பதால் நானும் அதை நீக்க முடியாது என்று உறுதியாகக் கூறிவிட்டேன்.
அதனால், டிரைலரை மறுதணிக்கைக்கு கொண்டு செல்லலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு வாசகத்துக்காக படத்தின் டிரைலருக்கு தணிக்கை குழு தடை விதித்திருப்பது அனேகமாக இதுதான் முதல் தடவையாக இருக்கும் என்று நினைக்கிறேன். தணிக்கை குழுவின் விதிகளும், அவர்கள் முன்வைக்கும் வாதங்களும் அவசியமற்றதாக உள்ளது.
பல படங்களில் அநாகரீகமான வார்த்தைகள் இடம்பெறுகின்றன. ஆபாசம், வன்முறை என்று அனைத்தையும் அனுமதிக்கும் தணிக்கை குழு, இதை நிராகரித்ததற்கான காரணம் புரியவில்லை. மறுதணிக்கையிலும் இந்த வாசகத்தை அனுமதிக்கவில்லை என்றால் ‘டிரைலர்' வெளியிடாமலேயே படத்தை வெளியிடப் போகிறேன்," என்றார்.
இதே வசனம் படத்தில் இடம்பெற்றாலும் சென்சார் அனுமதி மறுக்குமே.. அப்போது என்ன செய்வீர்கள்? படத்தையே வெளியிடாமல் விட்டுவிடுவீர்களா?
Post a Comment