நெல்லை: நடிகர் சங்கத் தேர்தலில் யார் வேண்டுமானாலும் தாராளமாக நிற்கட்டும், எங்களுக்கு பயமில்லை என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் நடந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் விழா ஒன்றில் கலந்து கொண்ட சரத்குமார், நிருபர்களிடம் பேசுகையில், "நடிகர் சங்கத்திற்கு நாங்கள் பொறுப்புக்கு வரும்போது சங்கம் கடனில் இருந்தது. அதை அடைத்துள்ளோம்.
சங்க கட்டடம் கட்டுவது குறித்த ஒப்பந்தம் குறித்து செயற்குழு, பொதுக்குழுவில் பேசப்பட்டு உள்ளது. அந்த ஒப்பந்தத்தால் சங்கத்திற்கு வருமானம்தான் வரும். இந்த ஒப்பந்தம் குறித்து எங்களிடம் யாரும் பேசவில்லை.
2013-ம் ஆண்டு நடந்த பொதுக்குழுவில் இன்று குற்றம் சாட்டுகிறவர்கள் சிறந்த தலைமை என்று பாராட்டி பேசினார்கள். நான் கடந்த முறையே பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறேன் என்றேன். அப்போது அவர்கள் நீங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றார்கள். இப்போது கட்டடம் கட்டி முடித்த பிறகுதான் போவேன் என்று கூறி இருக்கிறேன். ஏற்கனவே செயற்குழுவில் சூர்யா, சிம்பு உள்ளிட்டோர் இருந்து உள்ளனர்.
எங்கள் மீது சாட்டுக்கின்ற குற்றச்சாட்டு உண்மையானது அல்ல. அவர்களும் தேர்தலில் நிற்கிறார்கள். அவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் அவர்கள் வெற்றி பெற்று வரட்டும். அதை நாங்கள் தடுக்கவில்லை. நடிகர்களிடம் ஒற்றுமை வேண்டும். நடிகர் சங்க தேர்தலை விட்டு ஓடுவதற்கு நாங்கள் கோழையல்ல.
சங்கத்தில் அரசியல் கலந்துவிட்டதாக கூறுகிறார்கள். நடிகர் சங்க தேர்தல் அரசியலை புரட்டி போட்டு விடாது," என்றார்.
Post a Comment