பாகுபலிக்கு கர்நாடகாவிலும் பெரும் வரவேற்பு.. தியேட்டர் கண்ணாடி உடைப்பு

|

பெங்களூர்: பாகுபலி திரைப்படத்துக்கு கர்நாடகாவிலும் ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்து வருகின்றனர். ரசிகர்கள் டிக்கெட் எடுக்க முந்தியடித்து முயன்றபோது தியேட்டர் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவமும் இங்கு நடந்துள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் பிரமாண்ட படைப்பாக வெளியாகியுள்ளது பாகுபலி திரைப்படம். பெங்களூரில் 25 தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. பெரும்பாலும் தெலுங்கு மொழியிலும், சில தியேட்டர்களில் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் இப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது.

Bahubali gets huge support in Karnataka too

இதேபோல கர்நாடகாவின் பல நகரங்களிலும் பாகுபலி இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. ஆந்திராவை ஒட்டிய கர்நாடக மாவட்டங்களில் அதிக தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. கன்னட ரசிகர்களுக்கும் தெலுங்கு எளிதில் விளங்கும் என்பதால், தெலுங்கு ரசிகர்களோடு சேர்ந்து, அவர்களும் தியேட்டர்களில் முந்தியடிக்கின்றனர்.

ராய்ச்சூர் நகரிலுள்ள பூர்ணிமா தியேட்டரில், இன்று காலை காட்சியின்போது, டிக்கெட் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அச்சத்தால், ரசிகர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கியடித்தனர். இதனால், தியேட்டரின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. சில ரசிகர்கள் அந்த ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து சென்றனர்.

கோலார் நகரில், உள்ள நாராயணி தியேட்டரில், ஒரு டிக்கெட் விலையை ரூ.500 என நிர்ணயித்தும், அங்கு கூட்டம் அலைமோதுகிறது. கதாநாயகன் பிரபாஸ், பிரமாண்ட கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.

பெங்களூரின் பிரபல ஊர்வசி தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. கன்னட திரையுலக முக்கிய பிரமுகர்கள் பலரும் இங்கு வந்து சினிமா பார்த்தனர். மெஜஸ்டிக் பகுதியிலுள்ள பூமிகா தியேட்டரில், நடிகர்களுக்கு மட்டுமின்றி, இயக்குநர் ராஜமவுலிக்கும் பிரமாண்ட கட்-அவுட் அமைக்கப்பட்டு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இயக்குநர் ஒருவருக்கு கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது பெங்களூரில் அனேகமாக இதுதான் முதல்முறை என்கிறார்கள். கர்நாடகாவில் முதல் காட்சி காலை 7 மணி முதல் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment