தயாரிப்பாளர் சங்க தீர்மானத்தின்படி போக்கிரி மன்னன் படத்தை நாளை வெளியிடாமல் நிறுத்தினால் பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே நாளை அறிவித்தபடி படத்தை வெளியிடப் போகிறோம் என்று தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல் அறிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.தணிகைவேல் வழங்க, ரமேஷ் ரெட்டி தயாரிப்பில் ராகவ் மாதேஷ் இயக்கத்தில் ஸ்ரீதர், ஸ்பூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ள படம்‘போக்கிரி மன்னன்'.
நாளை முதல் புதிய படங்கள் வெளியாகாது என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய முடிவால் இந்தப் படம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
இந்தப் படம் நாளை வெளிவரும் என்று முன்னரே திட்டமிட்டு, அதற்காக பல திரையரங்குகளையும் ஒப்பந்தம் செய்துள்ளோம். சுமார் 1 கோடி ரூபாய் வரை படத்திற்காக விளம்பரப்படுத்தி செலவு செய்துள்ளோம். தயாரிப்பாளர் சங்கம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, தன்னிச்சையாக நேற்று, 4ம் தேதி முதல் படம் வெளிவராது என அறிவித்துள்ளனர்.
அப்படி நாளை நாங்கள் படத்தை வெளியிடவில்லை என்றால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே எங்களது ‘போக்கிரி மன்னன்' படத்தை நாளை நாங்கள் திட்டமிட்டபடி வெளியிடுகிறோம். அதற்கு அனைவரும் தங்களது மேலான ஆதரவை அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்," என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment