விக்ரம் நடித்துள்ள தெய்வத்திருமகன் படத்தின் தலைப்பு 3வது முறையாக மாற்றப்பட்டுள்ளது.
விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம் நடித்துள்ள படம் தெய்வத்திருமகன். இப்படத்திற்கு முதலில் தெய்வமகன் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. சிவாஜி கணேசன் நடித்த அட்டகாசமான படம் இது. இந்தப் படத்தின் தலைப்பை விக்ரம் படத்திற்கு வைக்க நடிகர் பிரபு அதிருப்தி தெரிவிக்கவே, படத்தின் தலைப்பை தெய்வத்திருமகன் என்று மாற்றினர்.
இந்தநிலையில் இந்தத் தலைப்புக்கு முக்குலத்தோர் வகுப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக விக்ரம் வீட்டு முன்பு முக்குலத்தோர் சமுதாய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேரில் சென்று தலைப்பை மாற்றுமாறு கோரி புகார் கொடுத்தார்.
இந்த நிலையில் படத்தின் தலைப்பு மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தயாரிப்பாளர் மோகன் நடராஜன் விக்ரம் நடிப்பில், இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாக்கி வந்த தெய்வத்திருமகன் படத்தலைப்பு குறித்து பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் நேரிலும், கடிதம் வாயிலாகவும் மற்ற அமைப்பினரும் தங்கள் கருத்தை தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தெரிவித்துள்ளனர்.
அதில், தமிழக மக்களால் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தெய்வத்திருமகன்
என்று போற்றப்படுவதால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசி தலைப்பை மாற்றிக் கொள்ள ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
எனவே அவர்களது நியாயமான உணர்வுகளை புரிந்து கொண்டு தயாரிப்பாளர் மோகன் நடராஜன் தெய்வத்திருமகன் தலைப்பை விக்ரமின் தெய்வத்திருமகன் என்று மாற்றிக் கொள்வதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
எனவே இத்திரைப்படத்தின் தலைப்பு விக்ரமின் தெய்வத்திருமகன் என்று மாற்றப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary
Actor Vikram's Deiva Thirumagan movie title has been changed after protests from Mukkulathor community. Now the movie is titled as Vikaramin Deiva Thirumagan. Earlier Deiva Magan was the title of the movie. But Actor Prabhu's objection the movie titled as Deiva Thirumagan.
Post a Comment