டிவி தொடர் தயாரிப்பாளர் நீரஜ் குரோவர் வழக்கிலிருந்து தப்பி வெளியே வந்துள்ள கன்னட நடிகை மரியா சூசைராஜை தனது அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க வைக்க விருப்பம் தெரிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா.
மும்பையைச் சேர்ந்த டிவி தொடர் தயாரிப்பாளர் நீரஜ் குரோவருக்கும், மரியாவுக்கும் இடையே நட்பு இருந்தது. கடந்த 2008ம் தேதி மரியாவைத் தேடி அவரது வீட்டுக்குப் போன மரியாவின் காதலர் ஜெரோம், மரியாவின் படுக்கை அறையில் ஒய்யாரமாக இருந்த குரோவரைப் பார்த்து வெகுண்டு அவரைக் கொலை செய்தார்.
பின்னர் ஜெரோமும், மரியாவும் சேர்ந்து குரோவரின் உடலை 300 துண்டுகளாக வெட்டி காட்டில் போட்டு விட்டனர்.
இந்த கொலை வழக்கில் இருவரும் கைதாகினர். நேற்று இவர்களுக்கான தண்டனையை மும்பை கோர்ட் அறிவித்தது. அதில், கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஜெரோம் கொலை செய்யவில்லை. எனவே அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், தடயங்களை அழிக்க முயன்ற குற்றத்திற்காக மரியாவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் அளிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
மேலும் மரியா ஏற்கனவே 3 ஆண்டுகளை சிறையில் கழித்து விட்டதால் அவரை விடுவிக்கவும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து மரியா இன்றைக்குள் விடுதலையாகவுள்ளார்.
இந்த நிலையில் பரபரப்பு இயக்குநரான ராம் கோபால் வர்மா, மரியாவை தனது அடுத்த படத்தில் நடிக்க வைக்கப் போவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்வீட்டரில் கூறுகையில், மரியா ஒரு பிரபல நாயகியாக வர வேண்டும் என்று விரும்பினார். ஆனால் மிகப் பிரபலமான கொலையாளி என்ற பெயர்தான் அவருக்குக் கிடைத்தது. எல்லாம் சரியாக அமைந்திருந்தால் அவருக்கும் ஒரு ரங்கீலா கிடைத்திருக்கும்.
இப்போது அவர் சிறையிலிருந்து வெளியே வரும் நிலை உருவாகியுள்ளது. எனவே எனது அடுத்த படத்தில் அவரை நடிக்க வைக்க விரும்புகிறேன் என்றார்.
ஏற்கனவே குரோவர் கொலை வழக்கை அடிப்படையாக வைத்து நாட் எ லவ் ஸ்டோரி என்ற பெயரில் ஒரு படத்தை உருவாக்கியவர் வர்மா என்பது நினைவிருக்கலாம். இப்போது மரியாவை வைத்து படம் எடுக்க வர்மா தீர்மானித்திருப்பதால் மரியாவின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்குவதாக கருதப்படுகிறது.
Post a Comment