திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமி தயாரிக்கும் படம், 'வழக்கு எண் 18/9'. ஸ்ரீ, மிதுன் முரளி, ஊர்மிளா, மனீஷா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளார்கள். விஜய் மில்டன் ஒளிப்பதிவு. பிரசன்னா இசை. நா.முத்துக்குமார் பாடல்கள். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் பாலாஜி சக்திவேல் பேசியதாவது: 'காதல்' மூலம் ஹிட் கொடுத்தும் 'கல்லூரி' சரியாகப் போகாததால் அடுத்த படம் இயக்குவதில் குழப்பம் இருந்தது. புது இயக்குனர்கள் வேறு வெவ்வேறு களத்தில் படம் கொடுத்து மிரட்டினார்கள். 'காதல்' படத்தை லிங்குசாமிதான் தயாரிக்க வேண்டியது. அது தவறியதால் அவருக்கு ஒரு படம் இயக்கி கொடுக்க வேண்டும் என்பதற்காக, இந்தக் கதையை தேர்வு செய்தேன். இதை உருவாக்குவதில் தடுமாற்றம் இருந்தது. அதை கதையாகச் சொல்ல முடியவில்லை. அதனால் லிங்குசாமியிடம், 'தயவு செய்து கதை கேட்காதீர்கள். நான் எடுத்து கொடுப்பதை பாருங்கள்' என்றேன். இரண்டு வருடம் ஆலோசித்து ஸ்கிரிப்ட் உருவாக்கினேன். படத்தின் தாமதத்துக்கு நான்தான் காரணம். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக இதை ஸ்டில் கேமராவில் உருவாக்கினோம். அது வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது. பட வெளியீட்டுக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் பேசப்படுவார். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் இயக்குனர்கள் சசி, எழில், எஸ்.எஸ். ஸ்டேன்லி, நா.முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment