நடிகர் சங்கத் தேர்தலில் விதிகள் மீறல்: நிர்வாகிகளாக சரத்குமார், ராதாரவி நீடிக்க தடை கோரி வழக்கு

|

Case Against Sarathklumar Radharavi Retain
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விதிகளை மீறி, நிர்வாகிகளாக சரத்குமார், ராதாரவி ஆகியோர் நீடிப்பதற்கு தடை கோரி சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் எஸ்.முருகன் என்ற பூச்சி முருகன் தாக்கல் செய்த மனுவில், "நான் 2006-ம் ஆண்டில் இருந்து தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் உறுப்பினராக இருக்கிறேன். இந்த சங்கத்தின் 2012-15-ம் ஆண்டுக்கான தேர்தல் அறிவிக்கை 30.4.12 அன்று வெளியானது. தேர்தல் அலுவலராக பிறைசூடன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் ஜுன் 10-ந் தேதி நடக்க உள்ளது.

நகல் தரவில்லை

இந்த நிலையில் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராதாரவி, தலைவர் சரத்குமார் ஆகியோருடன் இணைந்து அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் அலுவலர் செயல்பட்டு வருகிறார். இவர்கள் தற்போது வகிக்கும் பதவி ஜுலை வரை நீடித்தாலும், அவசரமாக தேர்தலை நடத்துகின்றனர்.

இதற்காக சங்க விதிகளையும், தமிழ்நாடு சங்க பதிவுச் சட்டங்களையும் மீறி செயல்படுகின்றனர். இந்த தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலின் நகலைக் கேட்டு கடந்த மே 14-ந் தேதி விண்ணப்பித்தேன். ஆனால் இதுவரை பட்டியலை எனக்கு தரவில்லை.

நடிகர் குமரிமுத்து உள்ளிட்ட மேலும் சிலருக்கும் தேர்தல் சம்பந்தப்பட்ட தகவல்களை கொடுக்க மறுக்கின்றனர். சங்க பதிவுச் சட்டத்தின்படி தொடர்ந்து ஆண்டுக் கணக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அந்த சட்டம் மீறப்பட்டுள்ளது.

இதற்காகவே இந்த சங்கத்தை சங்கப் பதிவாளர் எடுத்துக் கொண்டு நடத்த முடியும். இவர்களே மீண்டும் சங்க நிர்வாகப் பொறுப்புக்கு வரும் நோக்கத்தோடு விதிகளை மீறி செயல்படுகின்றனர். எனவே அவர்கள் இந்த சங்கத்தின் தேர்தலை முன்னிட்டு நிர்வாகப் பொறுப்பில் நீடிக்க தடை விதிக்க வேண்டும்," என்று கோரியுள்ளார்.

நோட்டீஸ்

இந்த மனுவை சிட்டிசிவில் கோர்ட்டு நீதிபதி பி.சரவணன் விசாரித்தார். விசாரணையை ஜுன் 5-ந் தேதிக்கு தள்ளி வைத்த அவர், அன்று பிரதிவாதிகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.
 

Post a Comment