நாம் உண்ணும் உணவே நம் உடல்நலத்தை தீர்மானிக்கிறது. நாம் எந்த வகை உண்கிறோமோ அதற்கேற்ப பலன்கள் நமக்கு கிடைக்கிறது என்று மக்கள் தொலைக்காட்சியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் தெரிவித்தார் உடல்நலப் பயிற்சியாளர் சங்கர்.
பெரும்பாலான தொலைக்காட்சிகளில் காலை நேரத்தில் உடற்பயிற்சி, யோகா, சமையல், உணவு என்று ஒளிபரப்புகின்றனர். ஆனால் மக்கள் தொலைக்காட்சியில் வித்தியாசமாக மாலை நேரத்தில் வணக்கம் தமிழா என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்றனர்.
இதில் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவருக்கும் ஏற்ற வகையில் நிகழ்ச்சிகளை தருவது சிறப்பம்சம். பெண்கள் கற்றுக்கொள்ள கைத் தொழில் தொடங்கி, பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு வீரக்கலை வரை கற்றுத்தரப்படுகிறது. சிறப்பு வாய்ந்த நிபுணர்கள் பங்கேற்று இதில் ஆலோசனைகளை தெரிவிக்கின்றனர்.
எட்டுவிதமான நிகழ்ச்சிகள் இதில் இடம் பெறுகின்றன. கைத் தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் பகுதியில் பெண்கள் பேன்சி நகைகள் செய்ய கற்றுத் தருகின்றனர். எண்சான் உடம்பை எழிலாக்குவோம் பகுதியில் உடற்பயிற்சி நிபுணர் சரவண் உணவுத்திட்டம் பற்றி தெரிவித்தார். தெரியும், தெரியாது நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் ரேவதி சங்கரன் மூளையின் திறமையை பற்றி எடுத்துரைத்தார்.
திருவாசகத்தேன் என்னும் இசை நிகழ்ச்சியில் செவிக்கினிய தமிழிசை பாடல்களை பாடினார்கள்.
மருந்தில்லா மருத்துவம் உடல்நல பயிற்சியாளர் சங்கர் உடல் ஆரோக்கியத்திற்கு 6 சுவை உணவு உண்ணவேண்டும் என்றும் அதற்கேற்ப 5 வகை உணவுகளையும் கூறினார். முதல்வகை உணவுகள் பழங்கள் இது உடலுக்கு நல்லது. இதில் அனைத்து வகை சத்துக்களும் உள்ளது. உயிர்ச்சத்து உள்ளதால் உடலுக்கு எல்லாவித சத்துக்களும் கிடைக்கிறது. இந்த பழங்களை உண்பதால் மனிதனின் ஆயுட்காலம் அதிகரிப்பதாகவும் தெரிவித்தார். இரண்டாம் வகை உணவு முளை கட்டிய தானியங்கள் பயிறுவகைகள். உயிர் ஊட்டப்பட்ட உணவு. பச்சை காய்கறிகள், கீரைகள் மூன்றாம் வகை உணவு. இவற்றை பச்சையாக சாப்பிட்டால் 6 சுவைகளும் அப்படியே கிடைக்கும். சமைத்த உணவுகள் நான்காம் வகை உணவு, நாம் சாப்பிடும் உணவில் 6 சுவை இருக்கவேண்டும். சமைத்த உணவில் 3 சுவைதான் இருக்கிறது. நிறைய ரசாயனம் கலந்து உண்கிறோம் எனவேதான் நோய்கள் தாக்குகின்றன. மாமிச உணவு 5 ம் வகை உணவு இவற்றை உண்பது உடல் நலத்துக்கு ஏற்றதல்ல என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து வெற்றியை நோக்கி என்ற தன்னம்பிக்கை பகுதியும், வீரக்கலை பகுதியில் மாணவர்களுக்குத் தேவையான சிலம்பாட்டம், கராத்தே நிகழ்ச்சியும் கற்றுத்தரப்பட்டது. திங்கள் முதல் வியாழன் வரை தினமும் மாலை 5.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியை ஜாஸ்மின் தொகுத்து வழங்குகிறார்.
Post a Comment