பாண்டியராஜனின் ஆண்பாவம் படத்தை ரீமேக் செய்கிறார் உதயநிதி!

|

Udayanidhi Remake Aanpaavam

சென்னை: இளையராஜா இசையில் பாண்டியராஜன் நடித்து இயக்கி பெரும் வெற்றி கண்ட ஆண்பாவம் படத்தின் ரீமேக் உரிமையை பெரும் விலைக்கு வாங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

இந்தப் படத்தை சந்தானமும் தானும் இணைந்து நடிக்க, ரீமேக் செய்ய உத்தேசித்துள்ளார்.

1985-ல் வெளியான படம் ஆண்பாவம். மறைந்த பாண்டியன் ஹீரோவாக நடித்திருந்தார். சீதா, ரேவதி, விகே ராமசாமி, ஜனகராஜுடன் பாண்டியராஜன் இன்னொரு ஹீரோவாக நடித்திருந்தார்.

இந்தக் காட்சி, அந்தக் காட்சி என்றில்லாமல், படம் ஆரம்பித்து நன்றி கார்டு போடும் வரை சிரித்துக் கொண்டே பார்த்த படம் ஆண்பாவம்தான். தமிழ் சினிமாவின் ட்ரென்ட்செட் படங்களில் ஒன்று இது.

படத்தின் முக்கிய ஹீரோ இசைஞானி இளையராஜா. அத்தனைப் பாடல்களும் தாறுமாறு ஹிட்!

விகே ராமசாமியும் அவரது அம்மாவாக நடித்திருந்த கொல்லங்குடி கருப்பாயியும் ரசிகர்களின் மனதில் நீங்காமல் நிலைத்துவிட்டார்கள்.

இந்தப் படத்தை இப்போது ரீமேக் செய்யும் முடிவில் இருக்கிறார் உதயநிதி. ஓகேஓகே வெற்றிக்குப் பிறகு, பெரிய வெற்றிப் படத்தைத் தந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள உதயநிதிக்கு, ஆண்பாவம்தான் அதற்கேற்ற சரியான படம் என்று ஆலோசனை சொல்லப்பட்டதாம். அவரும் படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்க, பாண்டியராஜன் பாத்திரத்தில் தானும், பாண்டியன் பாத்திரத்தில் சந்தானமும் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்துள்ளாராம்.

படத்தை இயக்க மீண்டும் ராஜேஷையே கேட்டுக் கொண்டுள்ளாராம் உதயநிதி.

 

Post a Comment