வாஷிங்டன்: இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட படத்தை எடுத்தவரான ஆலன் ராப்ரட்ஸ் என்பவர் ஒரு ஆபாசப் பட இயக்குநர் என்ற புதிய தகவல் வெளியாகி இஸ்லாமியர்களை மேலும் கொதிப்படைய வைத்துள்ளது.
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட இந்த சர்ச்சைப் படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த மீடியா பார் கிரைஸ்ட் என்ற கிறிஸ்தவ அமைப்புதான் தயாரித்துள்ளது. இந்தப் படத்தைத்தான் ராப்ரட்ஸ் இயக்கியுள்ளார்.
இஸ்லாம் மதத்தையும், இறுதி நபியான நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டு யூ டியூப்பில் இந்தப் படம் வெளியிடப்பட்டது. இதற்கு உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் குதித்துள்ளனர். பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்டு வருகின்றன. லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதில் அந்நாட்டுக்கான அமெரிகக தூதர் உள்பட 4 பேர் பலியாகினர்.
இந்த நிலையில் இயக்குநர் ராப்ரட்ஸ் ஒரு ஆபாசப் பட இயக்குநர் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் யங் சேட்டர்லி II மற்றும் கராத்தே காப் போன்ற ஆபாச படங்களை இயக்கியுள்ளார் என்று நியூஸ் 24 என்ற சேனல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த படத்தை புளோரிடாவில் பொது இடத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை எரித்த பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் உள்ளிட்டோர் விளம்பரப்படுத்தியுள்ளதால் மேலும் கொதிப்பு கூடியுள்ளது.
படத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியிருப்பது முஸ்லிம்களின் மனதை காயப்படுத்தியுள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் உள்ள முஸ்லிம்கள் அமெரிக்க பள்ளிகள், வியாபார இடங்களை எரித்ததில் பலர் பலியாகியுள்ளனர்.
கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 நாள் ஷூட்டிங் நடத்த மீடியா பார் கிரைஸ்ட் குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்றும், அவர்கள் டெசர்ட் வாரியர்ஸ் என்ற தலைப்பில் படம் எடுக்கத் தான் அனுமதி கேட்டனர் என்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் பிலிம் தலைவர் பால் ஆட்லி தெரிவித்துள்ளார்.
இந்த படத்தை இயக்கியவர் தான் ஒரு எகிப்தியர் என்று அந்த படத்தில் நடித்தவர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் ஒரு அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் இஸ்ரேலிய அமெரிக்கர் என்பது முக்கியமானது.
Post a Comment