ஸ் ஸ் ஸ்.... அப்பா இப்பாவே கண்ணை கட்டுதே, தம்பி டீ இன்னும் வரலை, வடை போச்சே !! என்ன இது என்று பார்க்கிறீர்களா? இது வடிவேலுவின் வசனம் மட்டுமல்ல கல்லூரி மாணவர்களின் கலாய் பாஷையில் இடம் பெற்றுள்ள சில வசனங்கள்.
அதென்ன கலாய் பாஷை என்கிறீர்களா? கேலி, கிண்டல் என்ற வார்த்தைதான் இப்போது கலாய்த்தல் என்று மாறி இருக்கிறது. நண்பர்களுக்குள் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்யவேண்டும் என்றால் குறிப்பிட்ட வார்த்தையை சொல்லாமல் சினிமா வசனத்தை குறிப்பிட்டு டைமிங்காக பேசுவது இன்றைக்கு பிரபலமடைந்து வருகிறது. இதை வைத்து இந்தவாரம் நீயா நானா நிகழ்ச்சி நடத்தி போணி செய்தார் கோபிநாத்.
கலாய்ப்பதில் சிறந்தவர்கள் ஆண்களா? பெண்களா என்று பார்த்த போது இருசாராரும் வெளுத்து வாங்கிவிட்டனர். "ஆமா இவ பெரிய நீயா நானா கோபிநாத்து வந்து கருத்து சொல்லிட்டா".... "கேக்கிறவன் கேனப்பயலா இருந்தா கோபிநாத் கோட் போடலைன்னு சொல்லுவாங்க." என்று சந்தடி சாக்கில் சிலர் கோபிநாத்தையும் வாரினார்கள்.
ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் வார்த்தைகளை உபயோகித்து பேசினர்.
"போன் வயறு பிஞ்சு ஒரு மணிநேரமாச்சு"
"அந்த போன்லதான் நீ ஒரு மணி நேரமா பேசிட்டு இருக்கே"
"துரை இங்கிலீஸ்லாம் பேசுது"
"நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரப்பட்டு வரமாட்டே"... என்று பேசிஆண்களை விட பெண்கள் கவுண்டராக கலாய்த்து அதிக மார்க் வாங்கினார்கள்.
இந்த கிண்டல் கேலி சிலருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் கிண்டலடிக்கப்படுகிற நபரின் மனது எந்த அளவிற்கு ரணமாகிறது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் நிகழ்ச்சியில் பேசினார்கள். இது கலகலப்பாக சென்ற நிகழ்ச்சியை சற்றே கண்ணீர் மழையில் நனைய வைத்தது. இதுவரை கலாய்த்தல் பற்றி இளைஞர் பட்டாளம் கிண்டல் மூலம் மனதை காயப்படுத்திய சக நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டதுதான் நிகழ்ச்சியின் ஹைலைட்.
கேலி, கிண்டல், லந்து, கட்டையை கொடுத்தல் என கலாய்த்தல் பலவகை இருந்தாலும் ஒருவரை ஒருவர் அட்ராக்ட் செய்வதற்காக கிண்டல் செய்யப்படுகிறது என்றார்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற மனநல மருத்துவர். ஆணும், பெண்ணும் சேரவேண்டும் என்பதற்காகவே உருவானது இந்த கலாய்த்தல். சாதாரணமாக கிண்டல் செய்வது தவறில்லை. ஆக்ரோசமான கலாய்த்தல்தான் மனதை பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.
கிண்டல் கேலி இல்லாவிட்டால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இல்லை என்றாலும் நம்முடைய கிண்டல் அடுத்தவரின் மனதை காயம் செய்யாமல் இருக்கவேண்டும் என்றும் மனநல மருத்துவர் வலியுறுத்தினார்.
நிகழ்சியின் இறுதியில் தீர்ப்பு சொன்ன கோபிநாத், எளியவர்களை கலாய்தது யாரையும் பலிகடா ஆக்கிவிடாதீர்கள் சென்ஸ் ஆப் ஹியூமர் வேறு, அடுத்தவனை காயப்படுத்தும் நகைச்சுவை வேறு. மனிதர்களின் உணர்வுகளோடு சம்பந்தப்பட்ட கலாத்தல் கவனமாக கையாளப்பட வேண்டும் என்று கூறி நிகழ்ச்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
ஸ்ஸ்ஸ் அப்பா, மாஞ்சா கீஞ்சு நூலு தூளாயிடுச்சு போ..!
Post a Comment