பெண் கமாண்டோக்கள் சூழ, தனது படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி முடித்தார் ஷாரூக்கான்.
காஷ்மீரில் முன்பு தீவிரவாதிகள் அட்டகாசம் தாளாமல், தியேட்டர்கள் மூடப்பட்டன. டி.வி.டி.கள் மற்றும் தொலைக்காட்சிகளில் மட்டும்தான் சினிமா பார்க்க முடியும் என்ற நிலை. அதேபோல முன்பெல்லாம் பெருமளவு நடந்த இந்திப் பட ஷூட்டிங்குகளும் குறைந்துவிட்டன.
ராணுவத்தின் தீவிர நடவடிக்கைக்குப் பிறகு ஓரளவு சகஜ நிலை திரும்பியுள்ளது.
இதைத் தொடர்ந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டு வருகின்றன. பழையபடி ஷூட்டிங்குகளும் ஆரம்பித்துள்ளன.
யாஷ் சோப்ரா இயக்கும் நடிகர் ஷாருக்கானின் புதிய இந்திப் பட ஷூட்டிங்கும் காஷ்மீரில் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக ஷாருக்கான், அனுஷ்கா சர்மா இயக்குனர் யாஷ்சோப்ரா ஆகியோர் படப்பிடிப்பு குழுவினருடன் பகல்காம் வந்து, படப்பிடிப்பு நடத்தினர்.
ஷாருக்கானை பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். பெண் ரசிகைகளும் கட்டுப்பாடுகளை உதறிவிட்டு ஷாருக்கானை பார்க்க ஆர்வம் காட்டுகிறார்கள். இதையடுத்து ஷாருக்கானுக்கு காஷ்மீர் மாநில அரசு பெண் கமாண்டோக்கள் பாதுகாப்பு அளித்தது.
பெண் கமாண்டோ படை டி.எஸ்.பி.ராஜா நிகாத் அமான் தலைமையிலான பெண் வீராங்கனைகள் எப்போதும் ஷாருக்கானுடன் நிழல் போல் சென்று பாதுகாப்பு அளித்தனர்.
இந்த டிஎஸ்பியும் ஷாருக்கானின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவருடன் நிழல் போல் கூடவே இருந்து பார்த்துக் கொண்டாராம்.
அதேபோல ஷாரூக்கானுக்கு ஹெலிகாப்டர் வசதியும் செய்து கொடுத்தது மாநில அரசு.
இந்த ஏற்பாடுகள் தனக்கு திருப்தி அளிப்பதாகக் கூறி நன்றி தெரிவித்துள்ளார் ஷாரூக்.
படப்பிடிப்பு முடிந்து பகல்காமிலிருந்து திரும்பியதும் அவர் வெளியிட்ட ட்வீட்: "எனது முன்னோர்களின் அழகிய மண்ணிலிருந்து திரும்பினேன். இதில் நான் சில பாடங்களையும் கற்றுக் கொண்டேன். அழகாக இருப்பது மட்டும் போதாது... அங்க இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள பெரும் வலிமை வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டேன்," என்றார்.
Post a Comment