திருவனந்தபுரம்: சேவை கட்டணத்தை உயர்த்தக் கோரி கேரளாவில் ஏ கிளாஸ் தியேட்டர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவில் உள்ள சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்துடன் ரூ.2 சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் மின் கட்டண உயர்வு மற்றும் இதர செலவுகள் காரணமாக சேவை கட்டணத்தை ரூ.5 ஆக உயர்த்த வேண்டும் என்று ஏ கிளாஸ் சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் கேரள அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அரசு அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தது.
இதையடுத்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். இந்த வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது. இதனால் இந்த சங்கத்தைச் சேர்ந்த 360 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் நேற்று வெளியாக இருந்த 4 படங்கள் வெளியாகவில்லை. இந்த வேலை நிறுத்தத்தில் பி கிளாஸ் தியேட்டர்கள், மல்டி பிளாக்ஸ் தியேட்டர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த தியேட்டர்களில் வழக்கம் போல் படங்கள் திரையிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment