மும்பை: நடிகை ஐஸ்வர்யாராயின் கலைச் சேவைக்குப் பரிசாக பிரான்ஸ் நாட்டின் கவுரவக் குடியுரிமை வழங்கப்பட்டது. ஐஸ்வர்யா ராயின் பிறந்த நாள் விழாவில் இந்த விருதினை மும்பையில் வழங்கினர் பிரான்ஸ் அதிகாரிகள்.
முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் நேற்று தன் 39 வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
மும்பை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த இந்த விழாவில் ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன், மாமனார் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் பிரான்கோயிஸ் ரிச்சியரும் பங்கேற்றார்.
அப்போது ஐஸ்வர்யா ராய்க்கு, பிரான்ஸின் இரண்டாவது உயர்ந்த விருதான கவுரவ குடியுரிமையை வழங்குவதாக பிரான்கோயிஸ் ரிச்சியர் அறிவித்தார்.
இந்த விருது குறித்து அமிதாப் பச்சன் கருத்து தெரிவிக்கையில், ‘‘ஐஸ்வர்யா ராய் பிறந்த நாள் கொண்டாடும் நேரத்தில் அவரை பிரான்ஸ் நாடு அங்கீகரித்து கவுரவித்து உள்ளது. அவரது கலை சேவையை பாராட்டி விருது வழங்கி உள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாட்டின் மிக உயரிய ‘கவுரவ குடியுரிமை' விருதை எனக்கு வழங்கியது. தற்போது எங்களது குடும்பத்தை 2-வது முறையாக அங்கீகரித்து பிரான்ஸ் நாடு கவுரவித்து உள்ளது,'' என்றார்.
இந்த விழாவில் ஐஸ்வர்யா ராய் தனது ஒரு வயது பெண் குழந்தை ஆராத்யாவுடன் கலந்து கொண்டார்.
Post a Comment