உயர்நீதிமன்ற நீதிபதி உள்பட 50 பேர் விஸ்வரூபம் பார்த்தனர்... நாளை தடை நீங்குமா?

|

Madras Hc Pronounce Verdict On Viswaroopam Tomorrow

சென்னை: சர்ச்சைக்குரிய விஸ்வரூபம் திரைப்படத்தினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடராமன் உள்ளிட்ட 50 பேர் நேற்று பார்வையிட்டனர். நாளை இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது தடையை நீக்கி நீதிபதி உத்தரவிடுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து தமிழக அரசு இப்படத்தை 2 வாரங்களுக்குத் திரையிட தடை விதித்து விட்டது. இதனால் விஸ்வரூபம் படம் திட்டமிட்டபடி தமிழகத்தில் ஜனவரி 25ம் தேதி திரைக்கு வரவில்லை. அதேபோல புதுவையிலும் இப்படத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையை எதிர்த்து நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதி்மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் ஜனவரி 26ம் தேதி படத்தைப் பார்ப்பதாகவும், 28ம் தேதி வரை படத்திற்குத் தடை நீடிக்கும் என்றும் அறிவித்தார்.

அதன்படி நேற்று நீதிபதிக்காக பிரசாத் ஸ்டுடியோவில் பிரத்யேக காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் காட்சியில் நீதிபதி வெங்கடராமன் உள்ளிட்ட 50 பேர் கலந்து கொண்டு படத்தைப் பார்த்தனர். உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளர், ஐந்து பதிவாளர்கள், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், ஐந்து அரசு வக்கீல்கள், கமல்ஹாசன் தரப்பு வக்கீல் ராமன், மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், இஸ்லாமிய அமைப்பினரின் வக்கீல்களான சங்கரசுப்பு, ரமேஷ், ராஜசேகர் உள்ளிட்டோர் இதில்அடக்கம்.

படம் பார்த்து முடித்ததைத் தொடர்ந்து நாளை வரும் விசாரணையின்போது நீதிபதி வெங்கடராமன் தனது உத்தரவை வழங்கவுள்ளார். அப்போது தடை நீக்கப்படுமா என்பது குறித்துத் தெரிய வரும்.

 

Post a Comment