கமல் செய்தது ஏமாற்று வேலை.. அவரால் என் படம் பாதிக்கப்பட்டுவிட்டது! - முக்தா சீனிவாசன் பாய்ச்சல்

|

Kamal Cheats Film Goers Says Muktha Srinivasan

சென்னை: விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதாகக் கூறி ரசிகர்களிடம் பணம் வசூலித்த கமல், சொன்னபடி படத்தை வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததோடு, அவர்களின் பணமும் திருப்பித் தரப்படவில்லை. இது ஒரு ஏமாற்று வேலைதான். அது எங்கள் படத்தையும் பாதிக்கிறது," என்று குற்றம்சாட்டினார் முக்தா சீனிவாசன்.

இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் கூறியதாவது:

ஒரு படத்தின் ரிலீசுக்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பாக ரிசர்வேஷன் செய்வது வழக்கம்.

பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸாகும் போது ரசிகர்கள் அந்த கூட்ட நெரிசலில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இந்த யோசனை இப்போது மற்ற படங்களின் வசூலை பாதிக்க ஆரம்பித்துள்ளது.

ஒரு ரசிகர் ஒரு படத்தை பார்க்க முன்பதிவு செய்கிறார் என்றால் அவருக்கு சொன்ன தேதியில் அந்தப் படத்தை போட்டுக்காட்டி விட வேண்டும். அப்படிச் செய்யமுடியவில்லை என்றால் முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு முழுப் பணத்தையும் திருப்பி கொடுத்து விட வேண்டும்.

ஆனால் விஸ்வரூபம் படத்தை பொருத்தவரை முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு இதுவரை பணம் திருப்பிக் கொடுக்கப்படவே இல்லை. இதனால் ஒரே ஒரு படத்துக்காக முன்பதிவு செய்யப்பட்ட கோடிக்கணக்கான பணம் மட்டும் ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்கிறது. இது ரசிகர்களை ஏமாற்றும் வேலை.

அந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்தால் அந்த ரசிகர் ரிலீஸாகியிருக்கும் மற்ற படங்களையாவது பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அந்தப் படங்களின் வசூலும் பாதிக்கப்படாமல் இருக்கும். அதனால் மற்ற படங்களின் வசூல் பாதிக்கப்படாமல் இருக்க விஸ்வரூபம் படத்துக்காக ரசிகர்களிடம் வசூலிக்கப்பட்ட முன்பதிவு பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முக்தா சீனிவாசன் தயாரிக்க, அவர் மகன் இயக்கத்தில் நேற்று பத்தாயிரம் கோடி என்ற படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்குதான் வசூல் இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் முக்தா. ஏற்கெனவே நாயகன் படம் தொடர்பான கமல் பேட்டி குறித்து முக்தா கடும் கண்டனம் தெரிவித்து, மான நஷ்ட வழக்கு தொடர்ந்தது நினைவிருக்கலாம்.

 

Post a Comment